தூய்மைப் பணிகளுக்காக மூடப்படும் ஒன்பது உணவங்காடி நிலையங்கள்

தூய்மைப் பணிகளுக்காக மூடப்படும் ஒன்பது உணவங்காடி நிலையங்கள்

1 mins read
1289fbaa-0524-4b73-acf8-988175afeb72
‘அவர் தெம்பனிஸ் ஹப்’ வளாகத்தில் அமைந்துள்ள உணவங்காடி நிலையமும் தூய்மைப் பணிகளுக்காக மூடப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள ஒன்பது உணவங்காடி நிலையங்கள் தூய்மைப் பணிகளுக்காக ஒன்றிலிருந்து மூன்று நாள்கள்வரை மூடப்பட்டிருக்கும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

சுத்தமான, சுகாதாரமான இடத்தில் சிங்கப்பூரர்கள் கட்டுப்படியான விலையில் உணவு வாங்கி உண்பதை உறுதிசெய்ய அவ்வப்போது இத்தகைய தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை வாரியம் குறிப்பிட்டது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின்கீழ் உள்ள உணவங்காடி நிலையங்களின் தூய்மைப் பணிகளைத் தேசிய சுற்றுப்புற வாரியம் கவனித்துக்கொள்கிறது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின்கீழ் உள்ள உணவங்காடி நிலையங்களின் தூய்மைப் பணிகளுக்கு நகர மன்றங்கள் பொறுப்பு வகிக்கின்றன.

தூய்மைப் பணிகளுக்காக மூடப்படும் ஒன்பது உணவங்காடி நிலையங்களில் பெரும்பாலானவை மத்திய வட்டாரத்தில் உள்ளன.

கிழக்கிலும் வடகிழக்கிலும் அமைந்திருக்கும் நமது தெம்பனிஸ் நடுவத்தில் உள்ள உணவங்காடி நிலையம், புவாங்கோக் உணவங்காடி நிலையம் ஆகியவற்றிலும் தூய்மைப் பணிகள் இடம்பெறும்.

இதற்கிடையே, ஜூன் 8ஆம் தேதியிலிருந்து பழுதுபார்ப்பு, மறுமேம்பாட்டுப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த டெக் கீ ஸ்குவேர் உணவங்காடி நிலையம் இம்மாதம் 7ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். அந்த உணவங்காடி நிலையம், அங் மோ கியோ அவென்யூ 10ல் உள்ள புளோக் 409ல் அமைந்துள்ளது.

ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து மேலும் 11 உணவங்காடி நிலையங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும். சிங்கப்பூரில் மொத்தம் 123 சந்தைகளும் உணவங்காடி நிலையங்களும் உள்ளன.

குறிப்புச் சொற்கள்