சிங்கப்பூரின் 14வது பொதுத் தேர்தலில் 206 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அவர்களில் 32 பேர் இந்தியர்கள். அவர்களில் ஒன்பது பேர் நாடாளுமன்றம் செல்கின்றனர்.
மொத்தம் பத்து கட்சிகள் தங்கள் சார்பில் இந்திய வேட்பாளர்களைக் களமிறக்கின.
மக்கள் செயல் கட்சியின் சார்பில் ஒன்பது இந்திய வேட்பாளர்கள் களமிறங்கினர். அவர்களில் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் களமிறங்கிய ஜெகதீஸ்வரன் ராஜுவைத் தவிர மற்ற எட்டு பேர் நாடாளுமன்றம் செல்கின்றனர்.
சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், விக்ரம் நாயர், சட்ட, போக்குவரத்துத் துணையமைச்சர் முரளி பிள்ளை, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு, சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா ஆகியோர் இம்முறை மீண்டும் களமிறங்கி வாகை சூடினர்.
முதன்முறையாகக் களமிறங்கிய இரு இந்திய வேட்பாளர்களான டாக்டர் ஹமீது ரசாக்கும் தினேஷ் வாசு தாஸும் வென்றுள்ளனர். இவர்கள் முறையே வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட், ஈஸ்ட் கோஸ்ட் தொகுதிகளில் போட்டியிட்டனர்.
பாட்டாளிக் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் உள்பட மூன்று இந்திய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அவர்களில் பிரித்தம் சிங் மட்டும் நாடாளுமன்றம் செல்கிறார்.
பிற கட்சிகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கைகளில் இந்திய வேட்பாளர்களைக் களமிறக்கின. சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி சார்பில் டாக்டர் பால் தம்பையா உள்ளிட்ட மூவர் போட்டியிட்டனர்.
ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் ரவி ஃபிலமோன், கலா மாணிக்கம் உட்பட நான்கு இந்தியர்கள் களமிறங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, மக்கள் சக்திக் கட்சி ஆகியவற்றின் சார்பில் தலா இரு இந்தியர்கள் களம் கண்டனர்.
சிங்கப்பூர் ஐக்கியக் கட்சி, சிங்கப்பூர் மக்கள் கட்சி சார்பில் தலா ஓர் இந்தியர் போட்டியிட்டனர். சீர்திருத்த மக்கள் கூட்டணி சார்பில் ஐவர் களமிறங்கினர். அவர்களில் யாரும் வெற்றி பெறவில்லை.

