சான்ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிங்கப்பூர் வந்து கொண்டிருந்த விமானத்தில் நான்கு பெண் ஊழியர்களை மானபங்கப்படுத்திய 73 வயது முதியவருக்கு புதன்கிழமை (ஏப்ரல் 2) ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தம் மீது சுமத்தப்பட்ட நான்கு மானபங்கக் குற்றச்சாட்டுகளை பாலசுப்பிரமணியன் ரமேஷ் ஒப்புக் கொண்டார். அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது அவர் மீதான மேலும் மூன்று மானபங்கம் தொடர்பான குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
ஒரு விமான ஊழியரை பாலசுப்ரமணியன் நான்கு முறை மானபங்கப்படுத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மூன்று பெண்களை இலக்காகக் கொண்டு மானபங்கச் செயல்களை அவர் செய்துள்ளார். ஊழியர்கள் கவர்ந்து இழுக்கும் வகையில் இருந்ததாக அவர் காரணம் கூறியுள்ளார்.
அவரால் பாதிக்கப்பட்ட அனைவரும் பணியில் இருந்தபோது சம்பவம் நடந்துள்ளது.
2024ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி 17 மணி நேர பயணத்திற்குள் குற்றச் செயல்கள் நடந்துள்ளன.
விமானத்தில் பயணம் செய்த பாலசுப்பிரமணியன், ஒரு சிப்பந்தியின் பின்பக்கத்தைத் தடவினார். மற்றொரு சிப்பந்தியை அவர் மூன்று முறை மானபங்கப்படுத்தினார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு பயணிக்கு உதவி செய்துகொண்டிருந்த 3வது சிப்பந்தியின் வலது மேல்தொடை மீது கை வைத்துள்ளார்.
நான்காவது சிப்பந்தியின் தொடை மீதும் அவர் கைவைத்து மானபங்கப்படுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட சிப்பந்திகளில் ஒருவர் தமது மேலாளரிடம் இது குறித்து தெரிவித்தார்.
சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கியதும் எஸ்ஐஏ கட்டுப்பாட்டு நிலையத்தில் அந்த மேலாளர் புகார் செய்ததைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.

