அனுபவமும் புது ரத்தமும் கலந்த சிங்கப்பூரின் புதிய அமைச்சரவையைப் பிரதமர் லாரன்ஸ் வோங் புதன்கிழமை (மே 21) அறிவித்துள்ளார்.
நிச்சயமற்ற, நிலைத்தன்மையற்ற காலத்தில் சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்லும் ஆக வலுவான குழுவை அமைத்துள்ளதாக அவர் கூறினார்.
புதிய அமைச்சரவையில் நால்வர் முக்கியப் பொறுப்புகளை ஏற்கின்றனர். துணைப் பிரதமராகத் திரு கான் கிம் யோங் தொடரும் நிலையில், திரு கா. சண்முகம், திரு சான் சுன் சிங், திரு ஓங் யி காங் மூவரும் ஒருங்கிணைப்பு அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற 14ஆம் பொதுத் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகப் பெரும்பான்மையுடன் வாகை சூடிய பிரதமர், அண்மைய காலத்தில் அதிகமான புதுமுகங்களைக் கொண்ட அமைச்சரவை இது என்றார்.
பிரதமர் பொறுப்பைக் கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி ஏற்றபின் அமைச்சரவையில் சிறு மாற்றங்களை மட்டும் அறிவித்திருந்த அவர், தற்போது பெரிய அளவில் மாற்றங்களைச் செய்துள்ளார்.
உலகப் பொருளியல் நிச்சயமற்றதாக இருக்கும் நிலையில், முக்கிய அமைச்சுகளில் மாற்றங்களைச் செய்யவில்லை என்று கூறிய திரு வோங், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் காணக்கூடும் என்றார். திரு வோங், நிதி அமைச்சராகத் தொடர்கிறார்.
வர்த்தக, தொழில் அமைச்சராகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங்கும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராக கிரேஸ் ஃபூவும் தொடர்கின்றனர்.
அந்த அமைச்சில் புதிதாக எரிசக்தி, அறிவியல் தொழில்நுட்பத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகிறார் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்.
தொடர்புடைய செய்திகள்
வெளியுறவு அமைச்சராக விவியன் பாலகிருஷ்ணன், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சராக கிரேஸ் ஃபூ, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சராக மசகோஸ் ஸுல்கிஃப்லி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சராக ஜோசஃபின் டியோ ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் தொடர்கின்றனர்.
திருவாட்டி இந்திராணி ராஜாவின் பொறுப்புகளில் மாற்றம் இல்லை. டாக்டர் ஜனில் புதுச்சேரி கல்வி அமைச்சு, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த துணை அமைச்சர் பொறுப்பை ஏற்கிறார்.
சமூக, பாதுகாப்பு அம்சங்கள் சார்ந்த அமைச்சரவைகளில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பொறுப்பேற்கும் புதியவர்கள்
திரு தினேஷ் வாசு தாஸ், திரு டேவிட் நியோ, திரு ஜெஃப்ரி சியாவ், திரு டெஸ்மண்ட் சூ, திருவாட்டி ஜேஸ்மின் லாவ், திரு கோ பெய் மிங், திரு ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம், திருவாட்டி கோ ஹன்யன், டாக்டர் சையத் ஹாருன் அல்ஹப்ஷி ஆகிய ஒன்பது பேரும் அமைச்சரவையில் இடம்பெறும் புதுமுகங்கள்.
திரு டேவிட் நியோவும் திரு ஜெஃப்ரி சியாவும் தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சராகவும் கல்விக்கான மூத்த துணை அமைச்சராகவும் டேவிட் நியோ பொறுப்பு ஏற்கிறார். இடைக்காலப் போக்குவரத்து அமைச்சராகவும் நிதி மூத்த துணை அமைச்சராகவும் ஜெஃப்ரி சியாவ் பணியாற்றுவார்.
திரு தினேஷ் வாசு தாஸ் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுக்கும் மனிதவள அமைச்சுக்குமான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்கிழக்கு வட்டார மேயராகவும் அவர் பொறுப்பேற்கிறார்.
பதவி உயர்வு
ஏற்கெனவே அமைச்சரவையில் அங்கம் வகித்த நால்வருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மூத்த துணை அமைச்சர்களாகத் திரு முரளி பிள்ளை, இணைப் பேராசிரியர் ஃபைஷால் இப்ராகிம், திருவாட்டி சுன் ஷுவெலிங் பதவி உயர்வு பெறுகின்றனர். திரு பே யாம் கெங் துணை அமைச்சராகிறார்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராகத் திரு ஃபைஷால் இப்ராகிம் நியமிக்கப்படுகிறார்.
திரு லீ சியன் லூங் மூத்த அமைச்சராகத் தொடர்கிறார். திரு டியோ சீ ஹியனும் திரு ஹெங் சுவீ கியட்டும் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து அவர்களுக்குப் பதிலாக மூத்த அமைச்சர், துணைப் பிரதமர் பொறுப்புகளுக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.
தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகத் திரு கா. சண்முகம் நியமிக்கப்படுகிறார். உள்துறை அமைச்சராகவும் அவர் தொடர்வார்.
அரசாங்கச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் தற்காப்பு அமைச்சராகவும் திரு சான் சுன் சிங் பதவியேற்பார்.
சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகத் திரு ஓங் யி காங் பதவி ஏற்பார். சுகாதார அமைச்சராக அவர் தொடர்வார் என்றும் மூப்படைதல் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
கல்வி அமைச்சராகும் டெஸ்மண்ட் லீ, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சில் சமூக சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகவும் தொடர்வார். இதுவரை அவர் வகித்துவந்த தேசிய வளர்ச்சி அமைச்சுக்குத் திரு சீ ஹொங் டாட் பொறுப்பேற்கிறார்.
சட்ட அமைச்சராகும் எட்வின் டோங், உள்துறை அமைச்சுக்கு இரண்டாம் அமைச்சராகவும் பொறுப்பேற்பார். மக்கள் கழகத்தின் துணைத் தலைவராக அவர் தொடர்வார்.
புதிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (மே 23) பதவியேற்கும்.

