ஈராண்டுக்கு ஒருமுறை தேசிய தொடக்கக்கல்லூரி நடத்திவரும் ‘ஃபன்டாசியா’ (Funtasia) தொண்டு கேளிக்கை விழாவை, இவ்வாண்டு மதியிறுக்கம் சங்கத்தின் ஈடன் பள்ளியுடனும் பெரியவர்களுக்கான ஈடன் மையத்துடனும் (Eden Centre for Adults) இணைந்து நடத்தியது.
தேசிய தொடக்கக்கல்லூரியின் முன்னாள் மாணவரான பிரதமர் லீ சியன் லூங், தேசிய தொடக்கக்கல்லூரியின் 55வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் இந்தக் கேளிக்கை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மே 11ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தேசிய தொடக்கக்கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வந்தோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5,000 என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் மாணவர்கள், பள்ளியில் பணிபுரிவோர், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் அடங்குவர்.
விழாவின் அனுமதிச்சீட்டுகளின் விற்பனையிலிருந்து திரட்டப்பட்ட நிதி முழுவதும் பெரியவர்களுக்கான ஈடன் மையத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கேளிக்கை விழாவில் இடம்பெற்ற சாவடிகள் சிலவற்றை ஈடன் பள்ளி மாணவர்களும் தேசியத் தொடக்கக்கல்லூரி மாணவர்களும் இணைந்து நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகைதந்த பிரதமர் லீ, இரண்டு பள்ளிகள் இணைந்து நடத்தும் சாவடிகள் சிலவற்றைப் பார்வையிட்டு, விளையாட்டுகளிலும் பங்கேற்றார். மாணவர்களுடன் கலந்துரையாடிய திரு லீ, அவர்களுடனும் கேளிக்கை விழாவிற்கு வருகைதந்திருந்த சிலருடனும் குழுப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து கல்லூரியின் 55ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்டிருக்கும் புதிய மரபுடைமைக் காட்சிக்கூடத்தைத் திரு லீ திறந்து வைத்தார்.
‘ஃபன்டாசியா’வுக்கான தயாரிப்பில், தேசியத் தொடக்கக்கல்லூரி மாணவர்கள் பெரியவர்களுக்கான ஈடன் மையத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து ஓவியம் வரைதல், அலங்கரித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களின் கைவண்ணங்கள் ‘ஃபன்டாசியா’ காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் ஒருவரான தேசியத் தொடக்கக்கல்லூரியின் மாணவர் தொண்டைமான் இராம் பிரபு, 16, ஈடன் பள்ளியில் பயில்வோருடன் நேரம் செலவழித்தது தனக்கு அதிக மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்ததாகக் கூறினார்.
“மதியிறுக்கமுள்ளவர்களும் நம்மைப் போலவே உணர்வுகள் கொண்டவர்கள். நாம் அவர்களிடம் எந்தவித பாகுபாடும் காட்டக்கூடாது,” என்று சொன்னார் அவர்.
2004ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்படும் இந்தக் கேளிக்கை விழாவின்வழி பள்ளிக்கு அப்பாற்பட்டிருக்கும் சமூகத்திற்கு உதவி செய்யலாம் என்ற எண்ணத்தோடு இந்த ஆண்டின் ‘ஃபன்டாசியா’ திட்டமிடப்பட்டதாக தேசிய தொடக்கக்கல்லூரியின் துணை முதல்வர் ஹரேஷ் சிவராம், 38, கூறினார்.
“சேவை என்பது நன்கொடை அளிப்பதுடன் முடிந்துவிடாது என்பதை மாணவர்கள் உணர வேண்டும். மதியிறுக்கமுள்ளவர்களுடன் நேரத்தைச் செலவிட்டு நட்பு கொள்வதும் சேவை புரிவதற்கான மற்றொரு வழியாகும்,” என்றார் திரு ஹரேஷ்.
தொடக்கக் கல்லூரியின் முன்னாள் மாணவரான திரு லீயை, வரவேற்றதில் தாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் திரு லீ புதிய காட்சிக்கூடத்தைத் திறந்து வைத்தது சிறப்பானது என்றும் சொன்னார் திரு ஹரேஷ்.

