5ஜி கட்டமைப்பு தொடர்பில் எழக்கூடிய பிரச்சினைகளால் சிங்கப்பூரில் இதுவரை விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 5ஜி தொழில்நுட்பம் உலகளவில் உருவெடுத்துவரும் வேளையில் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி தொழில்நுட்பக் கட்டமைப்பு தொடர்பான இடையூறுகளால் விமானத் துறை முறைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பாதுகாப்பு அபாயங்களை விளைவிக்கலாம் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் (ஐயாட்டா) இம்மாதம் ஒன்பதாம் தேதி எச்சரித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
அத்தகைய பிரச்சினைகளை எதிர்நோக்கியதாக சிங்கப்பூரில் இயங்கும் விமானிகள் யாரும் இதுவரை தகவல் அளிக்கவில்லை என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் விமானத் தரநிலைப் பிரிவுத் தலைவர் ஃபூங் லிங் ஹுவெய் தெரிவித்தார். 5ஜி தொழில்நுட்பத்தால் விமானத் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை ஆராய சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அனைத்துலக விமானத் துறை நிர்வாக அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

