சிங்கப்பூரில் பாரம் இழுக்கும் லாரிகளை (Trailer) நிறுத்தி வைப்பதற்கான வாகன நிறுத்தச் சான்றிதழ் (VPC) பெறவேண்டும் என்ற விதிமுறை ஈராண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்தத் தற்காலிக நிறுத்தம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) முதல் 2028 பிப்ரவரி 5 வரை நடப்பில் இருக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
எல்லா வகையான கனரக வாகனப் பிரிவுகளையும் ஆராய்ந்த பின்னர் இந்த முடிவுக்கு வந்ததாக ஆணையம் வியாழக்கிழமை (பிப்ரவரி 5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது வரை நடப்பில் உள்ள விதிமுறைப்படி, கனரக வாகனங்கள் மற்றும் இழுவை லாரிகளை நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை நிறுத்தி வைக்க வாகன நிறுத்தச் சான்றிதழ் பெறவேண்டும்.
குறிப்பிட்டதொரு வாகன நிறுத்துமிடத்தை இரவு முழுவதும் கண்டபடி அந்த வாகனங்கள் ஆக்கிரமிப்பதைச் சான்றிதழ் முறை தடுக்கிறது.
கனரக மற்றும் இழுவை லாரியைப் பதிவுசெய்யும்போதும் சாலை வரியைப் புதுப்பிக்கும்போதும் அல்லது வாகன உரிமையை வேறொருவருக்கு மாற்றும்போதும் அவற்றின் உரிமையாளர்கள் வாகன நிறுத்தச் சான்றிதழைப் பெற்றிருப்பது அவசியம் என்பது பிப்ரவரி 5 வரை நடப்பில் உள்ள விதி.
கனரக வாகனம் மற்றும் இழுவை லாரிகளின் உரிமையாளர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், சிங்கப்பூர்ப் போக்குவரத்துச் சங்கத்துடன் ஆலோசித்த பிறகு சான்றிதழ் முறையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டதாக ஆணையம் கூறியுள்ளது.
இது ஒரு சோதனை முயற்சி என்றும் அது தெரிவித்துள்ளது. சான்றிதழ் விலக்கு என்பது இழுவை லாரிகளுக்கு மட்டும்தான் என்றும் கனரக வாகனங்களுக்கு அது பொருந்தாது என்றும் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சோதனைக் காலத்தில், ஆக்கிரமிக்கப்படாத வாகன நிறுத்துமிடத்தை உரிமம் பெற்ற கனரக வாகனங்களுக்கு ஒதுக்கும்படி கேட்டு, வாகன நிறுத்துமிடங்களை நடத்துவோர் ஆணையத்திடம் விண்ணப்பிக்கலாம்.
சான்றிதழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், இழுவை லாரி உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் தங்களது வாகனத்தை முறையாக நிறுத்தி வைப்பதில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது.

