மத்திய கிழக்கு நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர்களைப் பணியமர்த்தும் எண்ணம் நிறுவனங்களுக்குக் குறைந்திருந்தாலும் உள்ளூர், வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடையே முதலாளிகளின் பணியமர்த்தும் முன்னுரிமைகளில் தற்போது எந்த மாற்றமும் இல்லை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வியாழக்கிழமையன்று (மே 7) தெரிவித்தார்.
எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்கும் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டாக்டர் டான், வேலை வாய்ப்புகளில் மத்திய கிழக்கு நெருக்கடி ஏற்படுத்தும் தாக்கம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது இவ்வாறு கூறினார்.
குறிப்பாக, செலவு அழுத்தங்கள் காரணமாகச் சில நிறுவனங்கள் ஊழியர் விரிவாக்கத்தைக் குறைத்து வரும் நிலையில், மனிதவள அமைச்சு பணியமர்த்தும் முன்னுரிமைகளில் ஏதேனும் மாற்றங்களைக் கவனித்துள்ளதா என்று இயோ சூ காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இப் ஹோன் வெங் கேட்டிருந்தார்.
2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் உள்ளூர்வாசிகளின் வேலைவாய்ப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதைச் சுட்டிக்காட்டிய டாக்டர் டான், தற்போதைக்குப் பணியமர்த்தும் முன்னுரிமைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.
“எங்கள் வேலை அனுமதி அட்டைக் கொள்கைகள், சிங்கப்பூரர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நிகரான ஒரு சமமான வாய்ப்பை வழங்குவதை உறுதிசெய்கின்றன. மேலும், இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்கள் நமது உள்ளூர் ஊழியர்களுக்குத் துணையாக இருப்பதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.
எம்ப்ளாய்மென்ட் பாஸ், எஸ் பாஸ் வைத்திருப்பவர்களுக்கான தகுதிபெறும் சம்பளங்களில் வரவிருக்கும் அதிகரிப்பு மற்றும் எம்ப்ளாய்மென்ட் பாஸ் விண்ணப்பதாரர்களுக்கான ‘பற்றாக்குறை தொழில்’ அளவுகோல்களின் வழக்கமான மறுஆய்வுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“உள்ளூர் வர்த்தகங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பும் சுதந்திரமும் இருப்பதை உறுதி செய்வதற்கும் அதே நேரத்தில், உள்ளூர் ஊழியர்கள், திறனாளர்கள் தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கான பாதையைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கும் இடையில் சரியான சமநிலையை ஏற்படுத்த நாங்கள் எப்போதும் முயல்கிறோம்,” என்று டாக்டர் டான் கூறினார்.
தொழிலாளர் சந்தை தொடர்ந்து மீள்திறனுடன் இருந்தாலும், அடுத்த மூன்று மாதங்களில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ள நிறுவனங்களின் விகிதம், பிப்ரவரியில் இருந்த 54.6 விழுக்காட்டிலிருந்து மார்ச் மாதத்தில் 44.6 விழுக்காடாகக் குறைந்துள்ளதை அவர் குறிப்பிட்டார்.

