தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாணயக் கொள்கையில் மாற்றமில்லை: சிங்கப்பூர் நாணய ஆணையம்

2 mins read
441b2b36-802c-4848-aab7-26458228de7b
சிங்கப்பூர் நாணய ஆணையம் இவ்வாண்டு ஜனவரியிலும் ஏப்ரலிலும் நாணயக் கொள்கையைத் தளர்த்தியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் நாணயக் கொள்கையில் மாற்றமில்லை என்று புதன்கிழமை (ஜூலை 30) தெரிவித்திருக்கிறது.

ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு நாணயக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் செய்யாத ஆணையம் இவ்வாண்டு ஜனவரியிலும் ஏப்ரலிலும் அதனைத் தளர்த்தியிருந்தது.

முந்திய நாணயக் கொள்கை அறிக்கைக்குப் பிறகு உலகளாவிய பொருளியல் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட வலுவாய் மீண்டுவந்திருப்பதாக ஆணையம் சொன்னது. சிங்கப்பூர் வெள்ளியின் பரிவர்த்தனை விகிதத்தைக் கட்டிக்காக்கப்போவதாக அது குறிப்பிட்டது.

புதிய வரிகள் குறித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அறிவிப்புகளுக்கு இடையே சிங்கப்பூரின் பொருளியல் ஆண்டின் முற்பாதியில் வலுவாக இருந்தது.

ஆணையம் இவ்வாண்டு முழுமைக்குமான அடிப்படைப் பணவீக்க முன்னுரைப்பிலும் மாற்றமில்லை என்று ஏற்கெனவே கூறியிருந்தது. அது சராசரியாக 0.5 விழுக்காட்டிலிருந்து 1.5 விழுக்காட்டுக்குள் இருக்கும் என்று ஆணையம் தெரிவித்தது.

வெளிப்புறச் சூழல் நிச்சயமற்று இருக்கும் நிலையிலும் உலகப் பொருளியலும் உள்நாட்டுப் பொருளியலும் இதுவரை மீள்திறனுடன் உள்ளதாக மத்திய வங்கி சொன்னது.

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 4.1 விழுக்காடாகவும் இரண்டாம் காலாண்டில் 4.3 விழுக்காடாகவும் பதிவாகியிருந்தது. அவை இரண்டுமே வர்த்தக, தொழில் அமைச்சின் ஆண்டு முழுமைக்குமான முன்னுரைப்பைக் காட்டிலும் அதிகம். சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி ஆண்டு முழுமைக்கும் பூஜ்ஜியத்திலிருந்து 2 விழுக்காடு வரை இருக்கும் என்று அமைச்சு இதற்கு முன்னர் கணித்திருந்தது.

சிங்கப்பூர்ப் பொருளியல் வளர்ச்சியின் வேகம் ஆண்டின் எஞ்சிய காலத்துக்கு மிதமான நிலையை எட்டவேண்டும் என்று நாணய ஆணையம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்