மைரிபப்ளிக் நிறுவனத்தின் இணையச் சேவையை முழுமையாகக் கைப்பற்றியிருக்கும் ஸ்டார்ஹப் நிறுவனம், மைரிபப்ளிக் வாடிக்கையாளர்களுக்குத் தங்கு தடையின்றி சேவை தொடரும் என உறுதி கூறியிருக்கிறது.
ஆகஸ்ட் 12ஆம் தேதி மைரிபப்ளிக் நிறுவனத்தின் அகண்டவரிசை இணையச் சேவைப் பிரிவை ஸ்டார்ஹப் முழுமையாகக் கைப்பற்றியது.
இந்த நிலையில் ரிபப்ளிக் இணையச் சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு சந்தா திட்டத்திலோ, கட்டணத்திலோ உடனடியாக எந்தவித மாற்றமும் இருக்காது என்று ஸ்டார்ஹப் தெரிவித்தது.
இது பற்றி மேலும் விவரங்களைத் தெரிவித்த ஸ்டார்ஹப்பின் வாடிக்கையாளர் வர்த்தகப் பிரிவின் தலைவரான மேட் வில்லியம்ஸ், “இந்த கையகப்படுத்தலால் ஸ்டார்ஹப் உள்கட்டமைப்பு வசதிகளைப் பரவலாகப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,” என்றார்.
மைரிபப்ளிக் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் ‘பிரீமியர் லீக்’ சந்தா கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
திரு வில்லியம்ஸ், ஆகஸ்ட் 14ஆம் தேதி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து மைரிபப்ளிக்கின் அகண்டவரிசை இணையச் சேவை வர்த்தகத்தில் ஸ்டார்ஹப் 50.1 விழுக்காடு பங்குகளை வைத்துள்ளது. தற்போது எஞ்சிய 49.9 விழுக்காடு பங்கையும் ஸ்டார்ஹப் வாங்கியுள்ளது. இதன் மூலம் மைரிபப்ளிக்கின் அகண்ட அலைவரிசை இணையச் சேவை முழுமையாக ஸ்டார்ஹப் நிறுவனத்தின்கீழ் வந்துள்ளது.
ஸ்டார்ஹப் செய்தித் தொடர்பாளர் ஒருவர், வேலை இழப்புகளுக்கு உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“கையகப்படுத்துதலைத் தொடர்ந்து நிறுவன மனிதவளச் மறுசீரமைப்பு அல்லது ஏற்கெனவே உள்ள சேவைகளில் மாற்றங்கள் செய்வதற்கான உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை. வணிகத்தை நாங்கள் தொடர்ந்து சீரமைத்து வலுப்படுத்துவதால், வாடிக்கையாளர்களுக்கு தரம், நம்பகத்தன்மை மற்றும் தடையற்ற அனுபவங்களை வழங்குவதில் எங்கள் கவனம் தொடர்ந்து உள்ளது,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“நாங்கள் சிறிது காலமாக மைரிபப்ளிக் அகன்ற அலைவரிசை குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தனித்துவமான முறையில் சேவை செய்வதில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். எனவே அதைத் தொடர அவர்களுக்கு இடமும் ஊக்கமும் அளிக்கப் போகிறோம்,” என்று திரு வில்லியம்ஸ் விளக்கக் கூட்டத்தில் கூறினார்.
மைரிபப்ளிக் வாடிக்கையாளர்களால் எழுப்பப்பட்ட ஒரு முக்கிய கவலையான மைரிபப்ளிக் அகன்ற அலைவரிசையின் அதிக பயனர்களுக்கான இணைப்பு வேகத்தை ஸ்டார்ஹப் குறைக்குமா என்பது குறித்த ஸ்ரெட்ய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு, தமது நிறுவனம் என்ன செய்யும் என்று திரு வில்லியம்ஸ் பதில் கூறவில்லை.