இந்தோனீசியக் குழந்தைக் கடத்தல் கும்பலால் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்ட குழந்தைகளின் தத்தெடுப்பு விவகாரத்தில், சிங்கப்பூரிலோ சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள தத்தெடுப்பு முகவர்களாலோ எந்தக் குற்றமும் செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கடத்தல் கும்பல் தத்தெடுப்புக்காகக் குறைந்தது 12 குழந்தைகளைச் சிங்கப்பூருக்கு அனுப்பியதாகவும் ஒவ்வொரு குழந்தையும் 200 மில்லியன் ரூப்பியா முதல் 250 மில்லியன் ரூப்பியா ($14,300 முதல் $17,880 வரை) வரை விற்கப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
அந்தச் சட்டவிரோதக் கும்பலுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த தத்தெடுப்பு முகவர்கள் மூவர்க்கு தொடர்பிருந்ததாக மேற்கு ஜாவா அதிகாரிகள் முன்னதாகக் கூறியிருந்தனர்.
கடந்த ஜூலை 21ஆம் தேதி, இந்தோனீசியாவின் பண்டுங்கில் உள்ள நீதிமன்றம், ஆட்கடத்தலில் ஈடுபட்ட 19 கும்பல் உறுப்பினர்களுக்கு மூன்று ஆண்டுகள், நான்கு மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்தது.
சிங்கப்பூரில், பணம் கொடுத்து பெற்ற பிள்ளையைத் தத்துக்கொடுக்க வைப்பது சட்டவிரோதமானது.
இருப்பினும், குழந்தைப் பிறப்பு தொடர்பான மருத்துவக் கட்டணங்கள், சட்டக் கட்டணங்கள், தத்தெடுப்பு தொடர்பான சேவைக் கட்டணங்கள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட தத்தெடுப்பு தொடர்பான கட்டணங்களுக்கு சட்டம் அனுமதி அளிக்கிறது.
“இதுவரை எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, சிங்கப்பூரிலோ சிங்கப்பூரர்களாலோ சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட அமைப்புகளாலோ குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என்பதை தற்போதைக்கு எங்களால் முடிவுசெய்ய இயலாது,” என்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) வெளியிட்ட கூட்டுப் பதிலில், உள்துறை அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் தெரிவித்தன.
சிங்கப்பூர்ச் சட்டங்களை மீறியவர்கள்மீது கடும் அமலாக்க நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது என்றும் அவை கூறின.


