‘கேபோட்’ போன்ற மின்சிகரெட் சாதனங்களைத் தாமாக முன்வந்து கைவிடும் அல்லது பெற்றோர்களால் திருத்தப்படும் இளையர்களுக்கு எதிராகக் குற்ற ஆவணங்கள் எதுவும் வழங்கப்படாது.
அதற்குப் பதிலாக, மறுவாழ்வு பெறவும் மின்சிகரெட் புழக்கத்தைக் கைவிடவும் உதவும் வகையில் வழிநடத்தப்படுவார்கள் என்று சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரான ஓங் யி காங் இன்று (ஆகஸ்ட் 28) செய்தியாளர்களிடம் கூறினார்.
கேபோட் என்றழைக்கப்படும் எட்டோமிடேட் உள்ள மின்சிகரெட்டுகளை முதன்முறை பயன்படுத்தும், 18 வயதுக்குக் கீழ் உள்ளோருக்கு $500 அபராதம் விதிக்கப்படும். அதுவே பெரியவர்களாக இருந்தால் அந்த அபராதம் $700ஆக அதிகரிக்கும்.
அபராதம் செலுத்துவதோடு, ஆறு மாத கால மறுவாழ்வுப் பயிற்சிக்கு அவர்கள் செல்ல வேண்டும். பயிற்சியை நிறைவு செய்யாதவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும்.
இரண்டாவது முறை பிடிபடுவோர் கைது செய்யப்பட்டு, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்படுவர். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு சிறுநீர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும்.
மூன்று முறை அல்லது அதற்கும் மேல் எட்டோமிடேட் மின்சிகரெட் பயன்படுத்தியதற்காகப் பிடிபடும் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் சிகிச்சைக்காகவும் மறுவாழ்வுபெறவும் அனுமதிக்கப்படுவர்.
அவர்கள் 12 மாத காலத்திற்குக் கண்காணிக்கப்பட்டு, போதைப்பொருள் பரிசோதனைகள் நடத்தப்படும்.
அவ்வாறு பிடிபடுவோர் 16 வயதுக்குக் குறைந்தவர்களாக இருந்தால், 12 மாத கால சமூகக் கண்காணிப்பின்கீழ் அவர்கள் வைக்கப்படுவது கட்டாயம்.
தொடர்புடைய செய்திகள்
மின்சிககெரட்டுகள் கணிசமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
அதனால்தான் அரசாங்கம் அதற்குத் தடை விதித்துள்ளதோடு, சட்டவிரோதமாக அவற்றை இறக்குமதி செய்வது, விற்பது, பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், எட்டோமிடேட் போன்ற ஆபத்தான பொருள்களைப் பயன்படுத்தும் கருவியாக மின்சிகரெட்டு உருவெடுத்திருப்பதால் நிலைமை மோசமாகிவிட்டது என்று செய்தியாளர்களிடம் கூறினார் சுகாதார அமைச்சருமான திரு ஓங்.
மின்சிகரெட்டுகளின் ஆபத்தான விளைவுகள் பற்றி அறியாத இளையர்கள் ஆர்வம் அல்லது வற்புறுத்தல் காரணமாக அதனைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள் என்றார் அவர்.

