கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூட்டுரிமை அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்த மீன் குளம் ஒன்றைச் சுத்தம் செய்வதற்காக அதில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டதில் சில மீன்கள் உயிரிழந்தன.
அந்தச் சம்பவத்தை அடுத்து, குளம் சுத்தம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துப்புரவு நிறுவனத்திற்குத் தேசிய பூங்காக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி ‘ஏக்கர்ஸ்’ எனப்படும் விலங்குநல ஆய்வு, கல்வி அமைப்பு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட காணொளியில், நீர் வெளியேற்றப்பட்ட குளத்தின் அடியில் மீன்கள் உயிருக்காகப் போராடுவது தெரிந்தது.
அதன் தொடர்பில், விலங்கு நல ஆர்வலர்களிடையே குறைகூறல்கள் எழுந்தன. அந்தக் குளத்தில் திருக்கை மீன்கள், திலாப்பியா மீன்கள், பிளெகோ மீன்கள் உள்ளிட்டவை இருந்ததாக ‘ஏக்கர்ஸ்’ தெரிவித்தது.
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அந்தக் கூட்டுரிமை அடுக்குமாடிக் குடியிருப்பின் பெயரோ அந்தத் துப்புரவு நிறுவனத்தின் பெயரோ வெளியிடப்படவில்லை.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி பதிலளித்த பூங்காக் கழகம், அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில் வேண்டுமென்றே துன்புறுத்தியதற்கான எந்த ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறியது.
மாறாக, குளத்தைச் சுத்தம் செய்யும் பணி மேலும் மேம்பட்ட வகையில் நிர்வகிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அது தெரிவித்தது.
வேண்டுமென்றே நடத்தப்பட்ட செயலைவிட, சுத்தம் செய்யும் பணியின்போது ஏற்பட்ட குறைபாடுகளினாலேயே மீன்கள் உயிரிழந்தன என்று விசாரணை மூலம் தெரியவந்ததாகப் பூங்காக் கழகம் சொன்னது.



