கடந்த ஈராண்டுகளில் மின்-சிகரெட்டுகள் வைத்திருத்தல் அல்லது பயன்படுத்துவது தொடர்பில் காவல்துறையிடமிருந்து சுகாதார அறிவியல் ஆணையத்திற்கு கிட்டத்தட்ட 5,000 புகார்கள் வந்தன.
அவற்றில், தங்கள் பிள்ளை மின்சிகரெட் பிடிப்பதாகக் கூறி அப்பிள்ளையைக் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த பெற்றோரின் புகாரும் அடங்கும் என்றார் சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம்.
திங்கட்கிழமையன்று (மார்ச் 3) நடந்த நாடாளுமன்ற அமர்வில் மின்சிகரெட் தொடர்பில் பிள்ளைகள் குறித்து புகார் அளித்த பெற்றோர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வு மெங் கேள்வியெழுப்பினார்.
அவருடைய கேள்விக்கு பதிலளித்தபோது திருவாட்டி ரஹாயு இவ்வாறு கூறினார்.
அப்பிள்ளையின் பெற்றோர் தமது வட்டாராத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிய டாக்டர் டான், பிள்ளைக்கு உதவ நினைத்து புகார் அளித்த பெற்றோரின் பிள்ளைக்கு 300 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என்றார்.
இந்த அணுகுமுறை அவர்களை வருத்தமடையச் செய்வதோடு, பிள்ளைகளுக்கு உதவ முன்வரும் மற்ற பெற்றோருக்கு இது தயக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என டாக்டர் டான் கூறினார்.
இச்சம்பவத்தை மேற்கோள்காட்டி பேசிய திருவாட்டி ரஹாயு, “பொதுவாக, மின்சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என ஒருவர் விரும்பினாலும் பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு உதவும் நோக்கில் அவர்களின் அப்பழக்கம் குறித்து தெரியப்படுத்தினாலும் அவற்றை நாங்கள் மிகவும் நுட்பமான முறையில் அணுகுவோம்,” என்றார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய பிள்ளைக்கு எச்சரிக்கையுடன் மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டதாக திருவாட்டி ரஹாயு மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தங்கள் பிள்ளை மின்சிகரெட் பிடிப்பதாகச் சந்தேகிக்கும் பெற்றோர், சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட விரும்புபவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய 1800-438-2000 என்ற எண்ணை அழைக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
வாரியத்தின் ‘குவிட்லைன்’ எனும் அத்திட்டமானது புகைப் பழக்கத்தில் சிக்கித் தவிப்போரை மீட்டெடுப்பதற்காக 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது எனக் கூறிய அவர், இத்திட்டத்தில் சேரும் தனிநபருக்கோ பெற்றோர் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் பிள்ளைகளுக்கோ அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்பட மாட்டாது என்றார்.
மேலும், இதுகுறித்து காவல்துறையை அணுகும் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குத் தெரியவந்தால், அதுகுறித்து தங்களிடம் தெரிவிக்கலாம் எனச் சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் கூறினார்.