தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விபத்துக்குள்ளான சிங்கப்பூர்க் கொடியேந்திய கப்பலில் தீப்பிழம்புகள் தென்படவில்லை: கப்பல் நிறுவனம்

1 mins read
265f5188-0c0f-45c9-968c-7a3353855f52
மலேசிய கடல்துறை அமலாக்க முகவை வெள்ளிக்கிழமை வெளியிட்ட இப்படத்தில், சிங்கப்பூர்க் கொடியேந்திய ‘ஹாஃப்னியா நையில்’ கப்பலில் தீப்பிடித்திருப்பதைக் காட்டுகிறது. - படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூர்க் கொடியேந்திய ‘ஹாஃப்னியா நையில்’ கப்பலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) ஏறி அதிகாரிகள் நடத்திய ஆரம்பக்கட்ட மதிப்பீட்டில், கப்பலில் தீப்பிழம்புகள் தென்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

பெட்ரா பிராங்கா தீவுக்கு வடகிழக்கே ஏறத்தாழ 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீர்ப்பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) காலை ‘ஹாஃப்னியா நையில்’ உட்பட இரு கப்பல்களில் தீ மூண்டதை அடுத்து, அவற்றிலிருந்து 36 ஊழியர்கள் மீட்கப்பட்டனர்.

சிங்கப்பூரின் கடல்துறை தேடுதல், மீட்புப் பகுதிக்கு உட்பட்ட கடலின் ஒரு பகுதியில் ‘ஹாஃப்னியா நையில்’ கப்பலும் சாவோ தொமே, பிரின்சிப்பி நாட்டுக் கொடியேந்திய ‘செரெஸ் I’ கப்பலும் காலை 6 மணியளவில் மோதிக்கொண்டதை அடுத்து தீ மூண்டது.

ஹாஃப்னியா கப்பல் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், கடல்துறை வேதியியல் நிபுணர் கப்பலில் கூடுதல் மதிப்பீடு செய்யவிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். கப்பலைச் சுற்றி மாசுபாட்டின் அளவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றார்.

கப்பலைப் பாதுகாப்பாக நகர்த்த மலேசிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் சொன்னார்.

‘ஹாஃப்னியா நையில்’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு சனிக்கிழமை சிங்கப்பூர் வந்துசேர்ந்த 22 ஊழியர்களும் நல்ல நிலையில் இருப்பதாகவும் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள தங்குமிடத்தில் அவர்கள் வசிப்பதாகவும் அப்பேச்சாளர் கூறினார்.

தென்சீனக் கடலில் நடந்த இச்சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்