சமூக ஊடகப் பயனர்களின் பாதிக்கும் மேற்பட்ட புகார்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாகக் கவனிக்கப்படவில்லை என்பதை சிங்கப்பூரின் ஊடகக் கட்டுப்பாட்டு அமைப்பு கண்டறிந்துள்ளது.
சமூக ஊடகங்களில் இடம்பெறும் குழந்தைத் துன்புறுத்தல், இணைய அச்சுறுத்தல் தொடர்பான தீங்கான உள்ளடக்கங்கள் குறித்து பயனர்கள் புகார் அளிக்கின்றனர்.
ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்க பெரும்பாலான சமூக ஊடகங்கள் சராசரியாக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நாள்களை எடுத்துக் கொள்கின்றன.
இது, வழக்கமாக சமூக ஊடகங்கள் எடுத்துக் கொள்வதாகக் கூறப்படும் காலத்தைவிட அதிகம் என்று தனது ஆண்டு அறிக்கையில் அந்த கட்டுப்பாட்டு அமைப்பான தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.
பிப்ரவரி 17ஆம் தேதி அதன் முதல் இணையப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையை அது வெளியிட்டிருந்தது.
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டோக், யூடியூப், எக்ஸ் (முன்னைய டுவிட்டர்), ஹார்ட்வேர்ஸோன் உள்ளிட்ட முன்னணி ஊடக நிறுவனங்கள் எப்படி பயனர்களை பாதுகாக்கிறது என்பதை ஆணையம் மதிப்பிட்டிருந்தது.
2023 ஆகஸ்ட் முதல் 2024 ஜூலை வரையில் பொதுமக்களில் ஒருவராக தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்களை ஆராய்ந்து அதற்கு சமூக ஊடகங்கள் எடுக்கும் பதில் நடவடிக்கைகளை ஆணையம் கவனித்துவந்தது.
இதில் இன்ஸ்டகிராம் மற்றும் ‘எக்ஸ்’ தளத்தின் செயல்பாட்டு தரம் குறைவாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இன்ஸ்டகிராம் பயனர்களின் புகார்களில் இரண்டு விழுக்காடுகளில் மட்டுமே பதில் நடவடிக்கை எடுத்தது. அதற்கும் ஏழு நாள்களுக்கு மேல் தாமதமானது. தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்த பிறகே மோசமான தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கத்தை அது அகற்றியது.
எக்ஸ் தளம், தீங்கான பாதிக்கும் மேற்பட்ட உள்ளடக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்தது. எஞ்சிய அதிக தீங்கான உள்ளடக்கங்கள் குறித்து ஆணையம் சுட்டிக்காட்டிய பிறகு அவற்றை எக்ஸ் அகற்றியது.
பாலியல், சுயமாக தீங்கு விளைவித்துக் கொள்ளும் உள்ளடக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க ‘எக்ஸ்’ தளம் சராசரியாக ஏழு முதல் ஒன்பது நாள்களும் தீங்கான உள்ளடக்கம் என்று வகைப்படுத்தப்பட்ட இதர பிரிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 20 நாள் வரையும் எடுத்துக் கொண்டது.
பயனர்களின் புகார்கள் மீது 15 மணி நேரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சராசரியை ஊடகங்கள் மிஞ்சியதை ஆணையம் தனது ஆய்வில் கண்டுபிடித்தது.
இந்த விவகாரத்தில் ஹார்ட்வேர்ஸோன் சிறப்பாகச் செயல்பட்டது. பத்தில் ஒன்பது புகார்கள் ஏறக்குறைய ஒவ்வொன்றிலும் மூன்று நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டது.