சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைத் தோற்றுவித்த டாக்டர் டான் செங் பொக், அடுத்த பொதுத் தேர்தலில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று சனிக்கிழமை (மே 10) கூறியுள்ளார். இருப்பினும், அவரது கட்சி அடுத்த சுற்றில் களமிறங்கும் என்றார் அவர்.
வெஸ்ட் கோஸ்ட் சாலை புளோக் 726ல் உள்ள வெஸ்ட் கோஸ்ட் சந்தையில் தொகுதி உலா செல்லும் முன் டாக்டர் டானும் கட்சித் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாயும் செய்தியாளர்களிடம் பேசினர்.
“எங்களுக்கு வாக்களித்தோருக்கு நன்றி சொல்லவும் வாக்களித்தோரிடம் நாங்கள் ஓடிப்போகவில்லை என்பதைக் காட்டவும்தான் இன்று இங்கு வந்தோம்,” என்றார் டாக்டர் டான்.
“நாங்கள் மீண்டும் வருவோம். அடுத்த ஐந்தாண்டுகளில் வருவோம்,” என்ற அவர், “அதற்குள் இளைய அணி முன்னிலை வகிக்கும் என்றும் மக்கள் எங்களை மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்றும் நம்புகிறோம்,” என்றார்.
மே 3ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி போட்டியிட்ட ஆறு தொகுதிகளிலும் பின்னடைவைச் சந்தித்தது.
தமது கட்சி கடுமையாகப் போராடியதாக டாக்டர் டான் குறிப்பிட்டார்.
“யாரையும் இப்போது குறை சொல்லப்போவதில்லை. இளைய உறுப்பினர்கள் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுக்குப் பயிற்சியளிப்பதுதான் இப்போது முக்கியம்,” என்று டாக்டர் டான் சொன்னார்.
இளைய தலைமுறைக்கு ஆலோசனை வழங்க கட்சியில் தொடர்ந்து நீடிக்கவிருப்பதையும் டாக்டர் டான் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் 26 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் இருந்துவிட்டேன். அந்த அனுபவத்தை இளையத் தலைமுறை பெற வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்,” என்றார் அவர்.
டாக்டர் டான், திரு லியோங் உள்ளிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அணி வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியிடம் தோல்வியுற்றது.
தேசிய வளர்ச்சி அமைச்சர் தலைமையில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சி அணி 60.01% வாக்குகளைப் பெற்றது.