கட்டுப்படியான விலையில் உணவுகளை விற்பனை செய்வதால் உணவங்காடி நிலையக் கடைக்காரர்களுக்கு இழப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படவில்லை என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் புதன்கிழமையன்று (செப்டம்பர் 24) தெரிவித்தார்.
ஏனெனில், வாடகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும்போது உணவின் விலையையும் அவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
தற்போது, திட்டத்தின் அடிப்படையில் உணவைக் கட்டுப்படியான விலையில் விற்கும் புக்கிட் கேன்பரா உணவங்காடி நிலையம் ஒருகாலத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவை இலவசமாக வழங்கியது என்றார் அவர்.
உணவங்காடி நிலையத்தில் உணவுக் கடை நடத்துவோருக்கான ஒப்பந்த விதிகளின்படி, தங்கள் சொந்தச் செலவில் தேவைப்படுவோருக்கு உணவங்காடிக் கடைக்காரர்கள் உணவு வழங்க வேண்டும் என்பதை உணவு விமர்சகரான கே.எஃப். சீட்டோ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.
அந்தப் பதிவு இணையவாசிகளால் பெரிதும் விவாதிக்கப்பட்டது.
உணவங்காடி நிலையத்தை நடத்துவோர் உணவுக் கடைக்காரர்களை இலவச உணவு வழங்க ஒப்பந்த அடிப்படையில் கட்டாயப்படுத்த தேசிய சுற்றுப்புற வாரியம் அனுமதி வழங்கியதா என்றும் எதிர்வரும் ஒப்பந்தங்களில் அத்தகைய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரூ கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த திருவாட்டி கோ, புக்கிட் கேன்பரா உணவங்காடி நிலையம் மட்டுமே சமூக உணர்வுள்ள நிறுவன உணவங்காடி நிலையம் என்றும் இலவச உணவு வழங்குவதற்கான தேவை அதற்கு மட்டுமே இருக்கிறது என்றார்.
மேலும், இந்த நிபந்தனை அங்கு உணவுக் கடை நடத்துவோருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் திட்டம் அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக ஒன்றிணைந்து உணவு உண்ணும் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதாகவும் அவர் விவரித்தார்.