குரங்கம்மை எச்சில் மூலம் பரவாததால், குறிப்பாக முகக் கவசங்கள் போன்ற பொருள்களை அவசரப்பட்டு வாங்குவதற்கான தேவை இல்லை என்று நோய்த்தொற்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
குரங்கம்மைக் கிருமி புதிய கொவிட்-19 கிருமியன்று என்று ஆகஸ்ட் 20ஆம் தேதி பெர்லினில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ஐரோப்பாவுக்கான உலகச் சுகாதார நிறுவனத்தின் வட்டார இயக்குநர் டாக்டர் ஹன்ஸ் குளூக கூறினார். அதிகாரிகளுக்கு அதன் பரவலைக் கட்டுப்படுத்தத் தெரியும் என்றார் அவர்.
அவரின் கருத்துகளைத் தொடர்ந்து, நோய்த்தொற்று நிபுணர்களின் கருத்து வந்துள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சோ சுவீ ஹொக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் தலைவரும், உலகச் சுகாதார அலுவலகத்தின் துணைத் தலைவருமான பேராசிரியர் தியோ யிக் யிங், குரங்கம்மை பெரும்பாலும் நெருங்கிய தொடர்பு மூலம் பரவுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
“அண்மையில் நிகழ்ந்த மற்ற பொதுச் சுகாதார அவசரநிலைகள் போல் அல்லாமல், நோய்த்தொற்றைத் தடுப்பது மட்டுமின்றி நோய்ப்பரவலையும் தவிர்ப்பதற்கான அதிகப் பயனுள்ள தடுப்பூசிகள் நம்மிடம் உள்ளது,” என்று நோய்த்தொற்றுகளுக்கான அனைத்துலகச் சமுதாயத்தின் தலைவர் பேராசிரியர் பால் தம்பையா கூறினார்.
“அதனால் நமக்குத் தொற்று ஏற்பட்டால், நமது தொடர்புகளுக்குத் தெரியப்படுத்தலாம். அப்போதுதான் அவர்கள் அதற்கேற்ப தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
“இது மிகப் பயனுள்ள உத்தி. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் 2022 முதல் 2023 வரை கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த இது உதவியது,” என்றார் அவர்.