சிங்கப்பூரில் புதிய வகை எம்பாக்ஸ் பாதிப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.
பிரிட்டனிலும் இந்தியாவிலும் எம்பாக்ஸ் கிருமியின் புதிய உருமாறிய வகை கண்டறியப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூரில் இதுவரை அத்தகைய பாதிப்புகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2022ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட அனைத்து எம்பாக்ஸ் சம்பவங்களும் ‘கிளேட் 2பி’ வகையைச் சேர்ந்தவை. இந்த ஆண்டில் இதுவரை பதிவான ஐந்து சம்பவங்களும் இதே வகையைச் சேர்ந்தவைதான்.
பிரிட்டன் மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கிருமி, ‘கிளேட் 1பி’ மற்றும் ‘2பி’ ஆகியவற்றின் கலவையாகும். இதன் தீவிரத்தைச் சிங்கப்பூரில் தொற்று நோய்களைச் சமாளிக்க ஆணைபெற்ற தொற்றுநோய் அமைப்பு (சிடிஏ) உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
காய்ச்சல், தோல் அழற்சி, தலைவலி, முதுகுவலி, நிணநீர் கணுக்கள் வீக்கம், சோர்வு மற்றும் அதிக அளவில் பலவீனமாக உணர்வது போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
இந்தக் கிருமி நெருங்கிய உடல் ரீதியான தொடர்பு மூலம் பரவுகிறது. பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் அபாயம் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக ஆபத்துள்ள பாலியல் செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள் கைகளைச் சுத்தமாக வைத்திருப்பதோடு, நோயுற்றவர்களுடனான தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
பயணம் முடிந்து திரும்பிய 21 நாள்களுக்குள் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி பயண விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
சிங்கப்பூர் அரசு அனைத்துத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

