நீரிணைவழியாகச் செல்ல யாரும் கட்டணம் விதிக்கமுடியாது: அமைச்சர் சண்முகம்

நீரிணைவழியாகச் செல்ல யாரும் கட்டணம் விதிக்கமுடியாது: அமைச்சர் சண்முகம்

2 mins read
சிங்கப்பூரின் நிலைப்பாடு குறித்துப் பேசினார் திரு கா. சண்முகம்
5ed83dfb-b3df-4e4b-8e71-0ee442ed0045
திங்கட்கிழமை (ஏப்ரல் 13) உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாடுகளுக்கிடையிலான அத்தியாவசியப் பயணங்கள் தொடர்பான உரிமைகளும் சுதந்திரமும் சம்பந்தப்பட்ட தரப்புகளைப் பொறுத்தது என்றும் தேவைப்பட்டால் அவற்றின் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவும் கட்டணம் செலுத்தவும் வேண்டியிருக்கும் என்றும் மற்ற நாடுகள் நினைக்கக்கூடும் என்பதை சிங்கப்பூர் நன்கு அறிவதாக தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) கூறினார்.

“கடல் விவகாரங்களுக்கான சட்டம் தொடர்பில் ஐக்கிய நாட்டு நிறுவன ஒப்பந்தம், நடப்பில் இருந்துவரும் அனைத்துலகச் சட்டம் ஆகியவற்றின்படி கட்டணம் விதிக்கவும் எந்தக் கப்பல்கள் சம்பந்தப்பட்ட கடற்பகுதிகள்வழிச் செல்லலாம் என்று முடிவெடுக்கவும் யாருக்கும் உரிமை கிடையாது என்பதே நமது நிலைப்பாடு,” என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.

ஹோர்முஸ் நீரிணை உட்பட அனைத்துலக அளவில் அத்தியாவசியப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுவரும் நீரிணைகள் முற்றுகையிடப்படுவது மிகவும் கவலை தரும் ஒன்று என்றார் திரு சண்முகம்.

ஈரானியத் துறைமுகங்கள் அனைத்தையும் திங்கட்கிழமை முதல் அமெரிக்க ராணுவம் முற்றுகையிடப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்ற உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவு நிகழ்ச்சி ஒன்றில் உள்துறை அமைச்சருமான திரு சண்முகம் பேசினார். அவர் தமது உரையில் மத்திய கிழக்குப் பூசலையும் மலாக்கா நீரிணையையும் ஒப்பிட்டுப் பேசினார்.

மலாக்கா நீரிணை, உலகின் சில முக்கிய வட்டாரங்களை இணைக்கும் நீரிணையாகும். உலக வர்த்தகத்தில் 30 விழுக்காடு அவ்வழியே மேற்கொள்ளப்படுவதைச் சுட்டிய அமைச்சர் சண்முகம், அது சிங்கப்பூர் கடல்துறை செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

“மலாக்கா நீரிணையின் ஆகக் குறுகிய பகுதியின் அகலம் இரண்டு நோட்டிக்கல் மைல்களுக்கும் (3.704 கிலோமீட்டர்) குறைவானது. அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையின் ஆகக் குறுகிய பகுதியின் அகலம் 21 நோட்டிக்கல் மைல் நீளம்கொண்டது,” என்றார் அவர்.

“மலாக்கா நீரிணை வழியாகச் செல்வதற்குப் பொதுமக்கள் உள்ள கப்பல்கள் கட்டணம் செலுத்தவேண்டும் இல்லாவிடில் ஏவுகணை, சுரங்க அல்லது வானூர்தித் தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று சொன்னால் என்ன செய்ய முடியும்,” என்று திரு சண்முகம் எடுத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்