ஜூலை 15ஆம் தேதி நடைபெற்ற ஜிசிஇ ‘ஓ’ நிலை (சாதாரண நிலை) ஆங்கில மொழிக்கான வாய்மொழித் தேர்வில், செயல்பாட்டுக்கோளாறு எதுவும் ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டு ஆணையம் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வில் வினாத்தாள் முரண்பாடுகள் இருப்பதாக 432 மாணவர்கள் புகார் அளித்திருந்த நிலையில், கல்வி அமைச்சின் மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி நாடாளுமன்றத்தில் இத்தகவலை வெளியிட்டார்.
வாய்மொழித் தேர்வின்போது மாணவர்கள் தயாரிப்பு நேரத்தில் பார்த்த வினாவுக்கும் தேர்வாளர்கள் வாசித்த வினாவுக்கும் இடையே வேறுபாடு இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து புகார்கள் பரவியதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டு ஆணையம் உடனடியாகத் தொழில்நுட்பப் பதிவுகள் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி, “அனைத்துத் தேர்வு நிலையங்களிலும் மாணவர்களும் தேர்வாளர்களும் தேர்வு தொடர்பாக ஒரே உள்ளடக்கத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மாணவர்களது கணினித் திரையில் தோன்றிய வினாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேர்வு உள்ளடக்கத்துக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை,” என்று கூறினார். மேலும், மாணவர்கள் புகாரளித்த வினாக்களின் அமைப்பில் எந்தவொரு குறிப்பிட்ட முறையோ அல்லது சீரான தன்மையோ இல்லை என்பதையும் மாணவர்கள் முன்வைத்த கருத்துகளில் வேறுபாடுகள் இருந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இணையப் பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசீலனை செய்ய பள்ளிகள் உதவி வருகின்றன. இந்தச் சிறப்புப் பரிசீலனை என்பது ஆதாரவங்களை மையமாகக் கொண்ட செயல்முறையாகும். இந்த அணுகுமுறையைக் கொண்டு, தேர்வுகளின்போது தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு அதனால் தேர்வில் தங்கள் முழு ஆற்றலைக் கொண்டு செயல்பட முடியாத மாணவர்களின் மதிப்பெண்களை சிக்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டு ஆணையம் மறுஆய்வு செய்யும்.
எதிர்காலத்தில் இத்தகைய குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில், 10 நிமிடத் தயாரிப்பு நேரத்தில் மாணவர்கள் வினாக்களை மேலும் கவனமாக வாசிப்பதற்கான நடைமுறைகள் குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.


