அண்மையில் சிங்கப்பூர் கடற்பகுதியில் இரண்டு எண்ணெய்க் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்தன.
கடலில் கசிந்த எண்ணெய்யைச் சிதறடிக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, தற்போது சிங்கப்பூர் கடற்பகுதியில் எண்ணெய்த் திட்டுகள் தென்படவில்லை என்று சம்பந்தப்பட்ட அமைப்புகள் அக்டோபர் 30ஆம் தேதியன்று தெரிவித்தன.
அக்டோபர் 20ஆம் தேதியன்று சிங்கப்பூரின் புலாவ் புக்கோமுக்கும் புக்கோம் கெச்சிலுக்கும் இடையிலுள்ள கடற்பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.
புலாவ் புக்கோமில் ஷெல் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலையிலிருந்து எண்ணெய் கசிந்து கடலை மாசுப்படுத்தியது தொடர்பாக தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையமும் சேர்ந்து நடத்தும் விசாரணை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 28ஆம் தேதியன்று பஹாமாஸ் கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது கடலில் எண்ணெய் கசிந்தது.
இந்த இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்தபோது கடலில் கசிந்த எண்ணெய்யைச் சிதறடித்து அதை சிறுத் துளிகளாக உடைத்து கடலில் கலக்க வைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் தற்போது கடலில் எண்ணெய்த் திட்டுகளைக் காண முடியவில்லை என்று அமைப்புகள் தெரிவித்தன.
எனவே, கடலில் கசிந்த எண்ணெய்யைச் சிதறடிக்கும் பணிகள் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று சம்பந்தப்பட்ட அமைப்புகள் அக்டோபர் 30ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டன.

