கட்டுமானக் குப்பையை வெளிநாட்டில் அகற்ற அனுமதி கிடையாது: என்இஏ

கட்டுமானக் குப்பையை வெளிநாட்டில் அகற்ற அனுமதி கிடையாது: என்இஏ

2 mins read
ஜோகூர் மாநிலத்தின் பொந்தியான் பகுதியில் சிங்கப்பூரிலிரு;து கொண்டுசெல்லப்பட்ட குப்பை குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம்
98d00965-1247-4a4d-94f7-cc90273613dc
பொந்தியானில் கட்டுமானக் குப்பை சட்டவிரோதமாகக் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களில் ஒன்று. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரிலிருந்து கட்டுமானக் குப்பை அல்லது கட்டடங்களை இடித்த பிறகு சேரும் குப்பையை வெளிநாட்டுக்குக் கொண்டுசென்று அகற்ற சிங்கப்பூர் அனுமதிப்பதில்லை என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் (என்இஏ) தெரிவித்துள்ளது.

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள பொந்தியான் பகுதியில் சிங்கப்பூரிலிருந்து கொண்டுசெல்லப்படும் கட்டுமானக் குப்பை சட்டவிரோதமாகக் குவிக்கப்படுவதாகக் கூறப்படும் விவகாரத்தின் தொடர்பில் வாரியம் அதனைக் குறிப்பிட்டது. மலேசியாவின் தேசியக் கழிவு நிர்வாகத்துடன் (எஸ்டபிள்யுகார்ப்) பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அது இவ்வாறு கூறியது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குs செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) பதிலளித்த தேசியச் சுற்றுப்புற வாரியம், பொந்தியானில் சட்டவிரோதமாகக் குப்பையைக் குவிப்பதன் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள நிறுவனங்கள் மலேசியாவைச் சேர்ந்தவை என்று தெரிவித்தது. இந்த விவகாரத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளனவா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் வாரியம் சொன்னது. அத்தகைய குப்பை சிங்கப்பூரில் கையாளப்பட்டு பிரிக்கப்படவேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.

தேசியச் சுற்றுப்புற வாரியம் மறுவுறுதி

“சிங்கப்பூரிலிருந்து கொண்டுசெல்லப்பட்டதாக நம்பப்படும் கட்டுமான, கட்டட இடிப்புக் குப்பை பொந்தியானில் அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டது குறித்து மேல்விவரங்களைப் பெற வாரியம் அண்மையில் எஸ்டபிள்யுகார்ப்பைத் தொடர்புகொண்டது,” என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் கூறியது.

“கட்டுமான, கட்டட இடிப்புக் குப்பையை வெளிநாட்டுக்குக் கொண்டுசென்று அகற்ற சிங்கப்பூர் அனுமதிப்பதில்லை என்று எஸ்டபிள்யுகார்ப்புடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது வாரியம் மறுவுறுதிப்படுத்தியது,” என்று அது குறிப்பிட்டது.

மலேசிய ஊடகம் வெளியிட்ட செய்தி

சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்படும் கட்டுமானக் குப்பை பொந்தியானில் குவிக்கப்படுவதாக மலேசிய ஊடகமான கொஸ்மோ இம்மாதம் 8ஆம் தேதி செய்தி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தேசியச் சுற்றுப்புற வாரியம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட விதிமுறைகளைப் பற்றிச் சிங்கப்பூரில் கட்டுமான, கட்டட இடிப்புக் குப்பையைக் கையாளும் பொதுக் கழிவை அகற்றும் நிறுவனங்களுக்கு (ஜிடபிள்யுடிஎஃப்) நினைவூட்டி ஆலோசனை அறிக்கையை வழங்கியதாகவும் வாரியம் தெரிவித்தது. சிங்கப்பூரின் விதிமுறைகளின்படி கட்டுமான, கட்டட இடிப்புக் குப்பை உள்ளூரில் சரியான முறையில் கையாளப்பட்டு மறுசுழற்சிக்காக இங்கேயே சேகரிக்கப்படவேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்உலகம்மலேசியாகுப்பைதேசிய சுற்றுப்புற வாரியம்