பெய்ஜிங்: சிங்கப்பூரில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்கள் நாட்டின் பொருளியலுக்கு உண்மையான நன்மைகளைக் கொண்டு வருகின்றன. எனினும், அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காகச் சிங்கப்பூரின் நம்பகமான நிலையை சில நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
“அந்த நிறுவனங்கள் சிங்கப்பூரில் உள்ளன. அவை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. நமது பொருளியலுக்குக் கூடுதல் பெறுமானத்தைச் சேர்க்கின்றன. சிங்கப்பூரர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்றன. எனவே இது சிங்கப்பூருக்குப் மிகப் பெரிய பலமாகும்,” என்று பிரதமர் வோங் சனிக்கிழமை (நவம்பர் 21) கூறினார்.
ஆனால், அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க சிங்கப்பூரின் நம்பகமான நிலையைத் தவறாகப் பயன்படுத்துவது, குறிப்பாக, பகுதிமின்கடத்தித் துறையில் ‘ஓர் உண்மையான கவலையாக’ உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட மேகக் கணினி நிறுவனமான ‘மெகாஸ்பீட் இன்டர்நேஷனல்’ தொடர்பில் ‘என்விடியா-மெகாஸ்பீட்’ சர்ச்சையைத் தொடர்ந்து இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சில்லு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மீறியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், அமெரிக்க அதிகாரிகள் அந்நிறுவனத்தின்மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூர் காவல்துறையினரும் சுங்கத் துறையினரும் 2025 பிப்ரவரி முதல் மெகாஸ்பீட் நிறுவனத்தை விசாரித்து வருகின்றனர்.
சீனாவுக்கு நான்கு நாள் அதிகாரத்துவப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் வோங், பெய்ஜிங்கில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சிங்கப்பூர் வழியாக விற்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் என்விடியா சில்லுகளைக் கண்காணிப்பதில் உள்ள சிரமங்களை அவர் விளக்கினார்.
உள்நாட்டில் பயன்படுத்தப்படும் சில்லுகளைச் சிங்கப்பூரால் கண்காணிக்க முடியும் என்பதையும் அமெரிக்க அதிகாரிகளின் சோதனைகளுக்கு உதவ முடியும் என்பதையும் அமெரிக்கா புரிந்துகொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், சிங்கப்பூரில் விற்பனையாகப் பதிவுசெய்யப்பட்டு, பின்னர் வேறு இடங்களுக்கு மறுஏற்றுமதி செய்யப்படும் சில்லுகளே பிரச்சினையாக உள்ளன. இத்தகைய வர்த்தகம் உள்நாட்டில் பயன்படுத்தப்படும் சில்லுகளின் அளவைவிட மிக அதிகமாக உள்ளது. சில சில்லுகள் சிங்கப்பூருக்குள் நேரடியாக வருவது கூட இல்லை.
“அந்தச் சில்லுகள் சென்றடையும் நாடுகளில் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் எங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவற்றைக் கண்காணிக்கும் வாய்ப்பும் இல்லை,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், அமெரிக்காவின் கவலைகளைத் தீர்க்க உதவும் வழிகள் குறித்து சிங்கப்பூர் ஆலோசித்து வருகிறது. அமெரிக்காவின் சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதும் அதில் அடங்கும்.
“அவர்கள் சார்பாக எங்களால் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட மற்ற நாடுகளில் அதைச் செய்ய முடியாது. ஆனால், எங்களால் உதவிக்கரமாக இருக்க முடியும்,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் நியாயமான தேவைகளுக்காக மேம்பட்ட சில்லுகளைப் பெறுவதே தமது தலையாய முன்னுரிமை என்று கூறிய பிரதமர் வோங், “அமெரிக்காவுடனான வலுவான, நீடித்த உறவின் மூலம், எங்களால் அதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.
