போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின் அனுமானங்களில் திருத்தம் செய்ய திட்டமில்லை: அமைச்சர் சண்முகம்

2 mins read
4896dfbc-fc01-4c7c-af11-0e4113cced20
நாடாளுமன்றத்தில் (ஏப்ரல் 8) பேசிய உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சட்டத்தில் உள்ள அனுமானங்கள் முக்கிய பங்களித்திருப்பதைக் குறிப்பிட்டார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம், போதைப்பொருள் சட்டத்தில் உள்ள அனுமானங்களில் திருத்தங்களை அறிமுகப்படுத்த சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு எந்தத் திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இருப்பினும் போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் அனுமானங்கள் தொடர்பிலான அரசமைப்பை நீதிமன்றம் முடிவுசெய்யும் என்றார் அவர்.

போதைப் பொருள் ஒழிப்புச் சட்டத்தின்படி கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் இருக்கும் குறிப்பிட்ட ஒரு பொருளை ஒருவர் வைத்திருந்தால் அவர் ஏற்கெனவே அந்தப் போதைப்பொருளை வைத்திருந்ததாக அனுமானிக்கப்படுகிறது.

அதோடு குறிப்பிட்ட அளவுக்கு மேல், கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளை வைத்திருப்போர் அதைக் கடத்துவதாகவும் கருதப்படுகிறது.

இது குற்றஞ்சுமத்தப்பட்டவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் விவரங்களை நிரூபிக்க உதவுகிறது.

உதாரணத்திற்குக் குற்றம் சாட்டப்பட்டவரிடம் போதைப் பொருள் இருந்ததை வழக்கறிஞர்களால் நிரூபிக்க முடியும்.

ஆனால், அது போதைப்பொருள் என்பது தமக்குத் தெரியாது என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் எளிதில் கூறி அதன் மூலம் குற்றம் நிரூபிக்கப்படுவதைத் தவிர்க்க முற்படலாம் என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.

வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர் அவ்வாறு கூறுவதை மறுப்பதும் எளிதாக இருக்காது என்ற அவர், போதைப்பொருளை அவர் தெரிந்தே வைத்திருந்தார் என்பதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களையும் திரட்டுவது சிரமமாயிருக்கும் என்றார்.

தம்மிடம் கண்டுபிடிக்கப்பட்டது போதைப்பொருள் என்று தமக்குத் தெரியாது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்டவரிடம் உள்ளது.

மேல் முறையீட்டு நீதிமன்றம் போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றஞ்சுமத்தப்பட்ட நால்வரின் வழக்கை விரைவில் விசாரிக்கவிருப்பதை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் சண்முகம் பதிலளித்தார்.

சென்ற ஆண்டு சிங்கப்பூரின் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போதைப்பொருள் வழக்கு விசாரணையில் தோல்வியடைந்த கைதிகள் போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தில் உள்ள அனுமானங்கள் குறித்து விவாதித்தனர்.

உலக நாடுகள் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த திணறிவரும் வேளையில், சிங்கப்பூர் போதைப் பொருள் புழக்கத்தின் விகிதத்தை மிகக் குறைவாக வைத்திருக்கிறது என்றார் அமைச்சர் சண்முகம்.

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க சட்டத்தில் உள்ள அனுமானங்கள் முக்கிய பங்களித்திருப்பதையும் அவர் தமது நாடாளுமன்ற உரையில் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்