சிங்கப்பூர்-ஜோகூர் இடையிலான போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் அனைத்துவிதமான யோசனைகளும் வரவேற்கப்படும்.
ஆனால் இரு தரப்புக்கும் இடையிலான வாடகை கார் சேவையை முழுஅளவில் தாராளமயமாக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் மற்றும் ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸியும் சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து தற்போது நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.
அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், ஓன் ஹஃபிஸ் காஸி ஆகியோரின் சந்திப்பின்போது சிங்கப்பூர்-ஜோகூர் இடையிலான போக்குவரத்தை மேம்படுத்த வாடகை கார் சேவை உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து பேசப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர்களின் சந்திப்புக்குப் பிறகு சில மலேசிய ஊடகங்கள் சிங்கப்பூர்-ஜோகூர் இடையிலான வாடகை கார் சேவை நடப்புக்கு வருவதுபோல் தகவல் வெளியிட்டன.
இதையடுத்து நிலப் போக்குவரத்து ஆணையம், “அமைச்சர்களின் சந்திப்பின்போது திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை மட்டுமே நடந்தது, முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை,” என்று அறிக்கைமூலம் தெளிவுபடுத்தியது.
தற்போது சிபிடிஎஸ் (CBTS) திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையில் 200 டாக்சிகள் போக்குவரத்து சேவை வழங்கி வருகின்றன. அவை அனைத்தும் உரிமம் பெற்று சேவை வழங்குகின்றன என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
சிபிடிஎஸ் திட்டத்தை யாரும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை, தேவை அதிகரிக்கும்போது உரிமங்கள் அதிகரிக்கப்படும். தற்போது நடப்பில் உள்ள உரிமங்களை டாக்சி சேவைகள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, மலேசியாவின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் எல்லை தாண்டிய பேருந்துச் சேவையை ஒரு மணி நேரம் முன்னதாகத் தொடங்குவது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் பேருந்து நிறுவனங்களும் பரிசீலித்து வருகின்றன.