சில கடற்கரைகளுக்கு அருகே நீச்சலைத் தவிர்க்க அறிவுறுத்தல்

2 mins read
ஷெல் எண்ணெய்க் குழாய்க் கசிவுக்குப் பிறகு தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ஆலோசனை
182b17f3-b8c6-4872-8726-37345cbae3fe
செந்தோசா கடற்கரைகளில் எண்ணெய்ப் படலம் ஏதும் காணப்படவில்லை என்று செந்தோசா மேம்பாட்டுக் கழகம் கூறியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, கூசுத் தீவு, செயின்ட் ஜான் தீவு, லாசரஸ் தீவு ஆகிய இடங்களின் கடற்கரைகளில் நீச்சல் உள்ளிட்ட நீர் விளையாட்டு நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

தேசிய சுற்றுப்புற வாரியம் அக்டோபர் 21ஆம் தேதி இவ்வாறு ஆலோசனை கூறியது.

புக்கோம் தீவுக்கும் புக்கோம் கெச்சிலுக்கும் இடையே அக்டோபர் 20ஆம் தேதி காலை ஷெல் நிறுவனத்தின் எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட கசிவை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரியத்தின் ஆலோசனை வெளிவந்துள்ளது.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிலும் வெஸ்ட் கோஸ்ட் பூங்காவிலும் எண்ணெய் உறிஞ்சும் மிதவைகள் போடப்பட்டுள்ளதாகவும் வாரியம் சொன்னது.

முன்னதாக, செந்தோசா கடற்கரைகளில் எண்ணெய்ப் படலம் ஏதும் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

செந்தோசாவின் அனைத்துக் கடற்கரைகளிலும் எண்ணெய்ப் படலமோ வாடையோ இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு அளித்த பதிலில் செந்தோசா மேம்பாட்டுக் கழகப் பேச்சாளர் கூறினார்.

தஞ்சோங், பலாவான், சிலோசோ கடற்கரைகள் பொதுமக்களுக்குத் திறந்திருப்பதாகக் கூறிய அவர், நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அவர்கள் அந்தக் கடற்கரைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றார்.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தக் கடற்கரைகளிலும் செந்தோசா கோல்ஃப் கிளப், ONE°15 மரினா கிளப், செந்தோசா கோவ் ஆகிய இடங்களிலும் எண்ணெய் உறிஞ்சும் மிதவைகளை அமைத்திருப்பதாக அவர் சொன்னார்.

“சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். முக்கியத் தகவல்களை ஃபேஸ்புக் பக்கத்திலும் இணையப்பக்கத்திலும் வெளியிடுவோம்,” என்று பேச்சாளர் கூறினார்.

இவ்வேளையில், அக்டோபர் 21ஆம் தேதி நிலவரப்படி மரினா ஈஸ்ட், ஜூரோங் தீவு கடல்நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளில் எண்ணெய்ப் படலம் ஏதும் காணப்படவில்லை என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

அவ்விரு ஆலைகளும் எண்ணெய்க் கசிவுச் சம்பவம் நடந்த இடத்திற்கு மிக அருகில் உள்ளவை.

ஆலைகளின் செயல்பாடு பாதிகப்படவில்லை என்றும் கடல் நீரின் தரம் வழக்கநிலையில் இருக்கிறது என்றும் கழகம் அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரினா நீர்த்தேக்கத்திற்கும் கடற்பரப்புக்கும் இடையில் மரினா அணைக்கட்டுப் பகுதியில் எண்ணெய்க் கட்டுப்பாட்டு மிதவைகளை அது அமைத்துள்ளது.

இவ்வேளையில் 30 டன்னுக்கும் அதிகமான எண்ணெய் கடல்நீரில் கசிந்ததாக ஷெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்