சாங்கி விமான நிலையத்தில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் திரைச்சீலைக்குத் தீவைத்ததாக 33 வயது ஆஸ்திரேலிய நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 12ஆம் தேதி சாங்கி விமான நிலைய முனையம் 2ல் இருக்கும் காத்திருப்பு அறையில் நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு அன்று அதிகாலை 2.15 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
காத்திருப்பு அறையில் சிகரெட் புகைக்க துணைக் காவல்துறை அதிகாரி அனுமதி மறுத்ததாகவும் அதனால் அந்த நபர் கோபமடைந்து அதிகாரியை வசைபாடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் அந்த நபர் தீரைச்சீலைக்குத் தீவைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
புகைபிடிக்க அனுமதி வழங்காவிட்டால், அனைத்து இடங்களுக்கும் தீவைக்கப் போவதாக அவர் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டது.
சாங்கி விமான நிலையக் காவல்துறை அதிகாரிகள் போராடி தீயை அணைத்ததாகவும் சம்பவத்தின்போது, அந்த நபர் அதிகாரிகள்மீது தீயணைப்புக் கருவியைப் பயன்[Ϟ]படுத்தியதாகவும் சொல்லப்பட்டது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 13ஆம் தேதி அந்த நபர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் அல்லது இரண்டில் ஒன்று விதிக்கப்படலாம்.