சிங்கப்பூரில் அணுக்கழிவுகளைச் சேமிக்க தொழில்நுட்பத் தடைகள் இல்லை: ஆய்வு

சிங்கப்பூரில் அணுக்கழிவுகளைச் சேமிக்க தொழில்நுட்பத் தடைகள் இல்லை: ஆய்வு

2 mins read
188c67fe-2a38-437f-923e-0f6aa82ad08a
பின்லாந்தின் தென்மேற்கே யூராஜோக்கி நகரில் உள்ள அணுசக்தி ஆலை. - படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூரில் அணுக்கழிவுகளை பூமிக்கடியில் சேமிப்பதற்கு பெரிய தொழில்நுட்பத் தடைகள் எதுவும் இல்லை என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

சுவீடனைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் சிங்கப்பூர் அதிகாரிகளும் சேர்ந்து அந்த ஆய்வை நடத்தினர்.

அணுசக்தியைப் பயன்படுத்த சிங்கப்பூர் முடிவுசெய்தால் அதன் மூலம் ஏற்படும் அணுக்கழிவுகளை பூமிக்கு அடியில் ஆழமான பகுதியில் சேமிக்க முடியும். அதனைத் தடுக்கும் அளவுக்குப் பெரிய தொழில்நுட்பத் தடைகள் எதுவும் இங்கு இல்லை என்பதை அந்த ஆய்வு கண்டறிந்தது.

கள ஆய்வுகளை உள்ளடக்காத கணினி வழியான ஆய்வின் அடிப்படையில் அந்த விவரம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஒரு முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ள, வருங்காலத்தில் கணக்கெடுப்புகள் செய்யப்பட வேண்டும் என எரிசக்திச் சந்தை ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறியது.

சிங்கப்பூர் போன்ற ஒரு சிறிய, அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் கதிரியக்கக் கழிவு நிர்வாகத்தின் தாக்கங்களை நன்கு புரிந்துகொண்டு மதிப்பீடு செய்வதற்கான ஆய்வை நடத்த எஸ்கேபி இன்டர்நேஷனல் என்னும் சுவீடன் நிறுவனம் அமர்த்தப்பட்டது.

எரிசக்திச் சந்தை ஆணையமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் இணைந்து கடந்த 2023ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தை ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தின.

2023ஆம் ஆண்டில் ஆய்வுப் பணிகள் தொடங்கினாலும் அதுபற்றி இவ்வாண்டு மே மாதம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாட்டு அமைப்பிற்குட்பட்ட அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் மதிப்பீட்டிற்கு சிங்கப்பூர் அடுத்த ஆண்டு உட்படுத்தப்படும் என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டபோதுதான் அணுக்கழிவு சேமிப்புக்கான ஆய்வு பற்றிய தகவலும் வெளியானது.

அணுசக்தியைப் பயன்படுத்தக்கூடிய ஆற்றலை சிங்கப்பூர் எந்த அளவுக்குப் பெற்றிருக்கிறது என்பதற்கான மதிப்பீடு அது. அனைத்துலக அணுசக்தி முகமை மதிப்பீடு செய்யவிருக்கும் 19 முக்கியப் பகுதிகளில் கதிரியக்கக் கழிவுகளை நிர்வகிப்பதில் சிங்கப்பூருக்கு இருக்கும் திறன்களும் அடங்கும்.

அத்தகைய கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிப்பதற்கும் அகற்றுவதற்குமான சிறந்த நடைமுறைகள் குறித்த நுண்ணறிவுகளை சுவீடன் நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளதாக எரிசக்திச் சந்தை ஆணையம் கூறியுள்ளது.

மேலும், அணுசக்தியை ஒரு தூய்மையான, புதிய ஆற்றல் வளமாகக் கருதுவது குறித்து சிங்கப்பூர் ஆலோசித்து வரும் வேளையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

அணுசக்தி அல்லது கதிரியக்கக் கழிவுகள் என்பவை அணுமின் நிலையங்களின் துணைப் பொருள்களாகும். அவை கதிரியக்கத் துகள்களைக் கொண்டிருக்கும் அல்லது அவற்றை வெளியேற்றும்.

மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடியனவாக அவை இருக்கும் என்பதால் அவற்றை முறையாகக் கையாள வேண்டும்.

அவ்வாறில்லாவிடில், அது மனித சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான சேதத்தை விளைவித்துவிடும்.

மேலும் அவற்றை மிகவும் கவனமாக அப்புறப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.

குறிப்புச் சொற்கள்