குறைந்த சம்பளம் பெறுவோர்க்கு 6% முதல் 8% வரை சம்பள உயர்வு வழங்கப் பரிந்துரை

தேசிய சம்பள மன்றத்தின் வழிகாட்டி நெறிமுறையை ஏற்றது அரசு

குறைந்த சம்பளம் பெறுவோர்க்கு 6% முதல் 8% வரை சம்பள உயர்வு வழங்கப் பரிந்துரை

1 of 2
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Oct 2026 - 2:02 pm

2 mins read

நாட்டில் நிலவும் பொருளியல் வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களின் ஊதியத்தை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்த தேசிய சம்பள மன்றம் புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. 

மன்றம் ஆண்டுதோறும் சம்பள வழிகாட்டி நெறிமுறையை வெளியிடும். அவ்வகையில் 2026-27க்கான பரிந்துரைகளை திங்கட்கிழமை (அக்டோபர் 19) மன்றம் வெளியிட்டது. 

மொத்த மாத ஊதியமாக $2,800 வரை ஈட்டும் ஊழியர்களுக்கு இந்த ஊதிய உயர்வுப் பரிந்துரைகள் பொருந்தும்.

நல்ல லாபமும் வளர்ச்சியும் கண்டுள்ள நிறுவனங்கள், தங்களின் குறைந்த வருமான ஊழியர்களுக்கு 6 விழுக்காடு முதல் 8 விழுக்காடு வரையிலான ஊதிய உயர்வை அல்லது குறைந்தபட்சம் $135 முதல் $170 வரையிலான உயர்வை வழங்க வேண்டும் என மன்றம் பரிந்துரைத்துள்ளது. இதில் எது அதிகமோ அத்தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இது, 2021ல் இலக்கு சார்ந்த வழிகாட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு அறிவிக்கப்பட்ட மிக உயர்ந்த ஊதிய உயர்வாகும்.

உற்பத்தி, மின்னியல் துறைகள் ‘ஏஐ’ தேவைகளால் அபார வளர்ச்சியடைந்திருந்தாலும், உணவகம் போன்ற பயனீட்டாளர் சார்ந்த துறைகள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. 

இதனால் நிலவும் சீரற்ற பொருளியல் சூழல், உலகளாவிய நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில்கொண்டு, சம்பள மாற்றங்களில் நீக்குப்போக்கைப் பேண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

அவ்வகையில், மன்றம் வழங்கியுள்ள பரிந்துரைகளில் தொழில் நிலவரம், நிதிச் சவால்களை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்கேற்ப நீக்குப்போக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, சிறப்பாகச் செயல்படாத போதிலும் லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் 6 விழுக்காடு முதல் 8 விழுக்காடு வரையிலான குறைந்தபட்ச வரம்பில் அல்லது குறைந்தபட்சம் $120 ஊதிய உயர்வு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

முதன்முறையாக, பரிந்துரைகளில் நிதி நெருக்கடியில் உள்ள, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்காகவும் புதிய நடைமுறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, அத்தகைய நிறுவனங்களும் தங்களின் குறைந்த வருமான ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் $120 ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று மன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, மன்றம் குறிப்பிட்டுள்ள 2026/2027ஆம் ஆண்டிற்கான பரிந்துரைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த ஊதிய உயர்வை முதலாளிகள் எவ்விதச் சுமையுமின்றி வழங்க ஏதுவாக, படிப்படியான சம்பள உதவித் தொகை திட்டத்தை 2028 இறுதி வரை நீட்டிப்பதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்கும். 

இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சிங்கப்பூர் பொருளியல் எதிர்பார்த்ததைவிட வலுவாக 6 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது.

இருப்பினும், துறைசார்ந்த வளர்ச்சி சீரற்ற முறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம், ஊழியர்களின் உழைப்புக்கேற்ற நியாயமான ஊதிய உயர்வை வழங்க முதலாளிகள் ஆக்ககரமான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும், இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு செயற்கை நுண்ணறிவு யுகத்தில் ஊழியர்களின் பணிகளை மறுவடிவமைப்பு செய்து, அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்க முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சம்பளம்சிங்கப்பூர்ஊழியர்என்டியுசி