நாடாளுமன்ற நியமன உறுப்பினர்களாகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஊழியரணி மீள்திறன், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கு ஆதரவு வழங்கக்கூடிய சுகாதாரப் பராமரிப்புச் செலவினங்கள் போன்ற விவகாரங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் பேச இருக்கின்றனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் ஒப்பிடுகையில் தங்களுடைய பங்களிப்பு மாறுபடும் என்று திங்கட்கிழமையன்று (ஜனவரி 5) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய நாடாளுமன்ற நியமன உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.
தேர்தல் சார்ந்த அரசியலுக்கு உட்படாமல் தங்களால் சிங்கப்பூரின் நீண்டகாலச் சவால்களை ஆராய முடியும் என்று அவர்கள் கூறினர்.
மொத்தம் ஒன்பது பேர் நாடாளுமன்ற நியமன உறுப்பினர்களாகச் சேவையாற்றுவர். அவர்களில் எண்மர் புதுமுகங்கள். ஒருவர் ஏற்கெனவே நாடாளுமன்ற நியமன உறுப்பினராகச் செயல்பட்டவர்.
பரிந்துரைக்கப்பட்ட 57 பெயர்களிலிருந்து இந்த ஒன்பது பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திட்டம் 1990ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டில்தான் ஆக அதிகமான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நியமனத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் ஜனவரி 2ல் அறிவிக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஒன்பது பேரையும் வியாழக்கிழமையன்று (ஜனவரி 8) அதிபர் தர்மன் சண்முகரத்னம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அதிகாரபூர்வமாக நியமிப்பார்.
ஜனவரி 12ஆம் தேதியன்று நாடாளுமன்றம் கூடும்போது புதிதாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்வர்.
நிபுணத்துவப் பொறுப்புணர்வை உறுதி செய்வதன் மூலம் அரசாங்கச் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு ஆதரவு வழங்குவதில் கவனம் செலுத்தப்போவதாக நாடாளுமன்ற நியமன உறுப்பினராகச் செயல்படவிருக்கும் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு தெரிவித்துள்ளார்.

