பாட்டாளிக் கட்சியின் திரு ஆண்ட்ரே லோவும் திருவாட்டி ஐலீன் சோங்கும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் சேர்த்து பாட்டாளிக் கட்சி மொத்தம் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
திரு லோவும் திருவாட்டி சோங்கும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டதை திங்கட்கிழமை (மே 19) அரசாங்கத்தின் மின் அரசிதழில் தேர்தல் அதிகாரி கையெழுத்திட்ட அறிக்கை குறிப்பிட்டது.
மே 3ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் 34 வயது திரு லோ, ஜாலான் காயு தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் திரு இங் சீ மெங்கை எதிர்த்து போட்டியிட்டார். அங்கு 48.53% வாக்குகளைப் பெற்று திரு லோ தோல்வியுற்றார்.
33 வயது திருவாட்டி சோங், ஐந்து உறுப்பினர்கள் கொண்ட அணியுடன் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் களமிறங்கினார். அங்கு நான்குமுனைப் போட்டி நிலவியது.
திரு மசகோஸ் ஸுல்கிஃப்லியின் தலைமையில் களமிறங்கிய மக்கள் செயல் கட்சிக்கு எதிராக 47.37% வாக்குகளைப் பெற்று பாட்டாளிக் கட்சி அணி பின்னடவைச் சந்தித்தது.
திருவாட்டி சோங், திரு லோ ஆகிய இருவரும் பொதுத் தேர்தலில் களமிறங்கிய புதுமுகங்கள்.
தேர்வுசெய்யப்படாத எதிர்க்கட்சி வேட்பாளர்களில் ஆக அதிக வாக்குகளைப் பெற்றவர்களில் தெம்பனிஸ் குழுத்தொகுதியின் பாட்டாளிக் கட்சி அணி இரண்டாம் நிலையில் வந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 12க்கும் குறைவாக இருந்தால் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இடம் வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அந்த வகையில் பாட்டாளிக் கட்சி வெற்றிகரமாக 10 நாடாளுமன்ற இடங்களைத் தக்கவைத்துக்கொண்டது.
“திருவாட்டி சோங்கை தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்க முடிவெடுத்துள்ளதைப் பாட்டாளிக் கட்சி மே 18ஆம் தேதி தெரிவித்தது,” என்று தேர்தல் துறை குறிப்பிட்டது.