பாட்டாளிக் கட்சியின் கூட்டத்தில் அழையா விருந்தாளி அல்ல நூர் டெரோஸ்: பிரித்தம் விளக்கம்

2 mins read
a461ccf4-8627-4060-9636-35c65083aeb3
நாடாளுமன்ற அவைத் தலைவர் இந்திராணி ராஜா, எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங். - படங்கள்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

பொதுத் தேர்தல் காலத்தில் மலாய்/முஸ்லிம் தலைவர்களுடன் எதிர்க்கட்சி நடத்திய ஏப்ரல் மாதக் கூட்டத்தில் சுய சமய போதகர் திரு நூர் டெரோஸ், யாரும் அழைக்கப்படாமல் பங்கேற்றார் என்று கூறப்பட்ட தகவல் தவறானது என்று பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) அன்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

அக்டோபர் 14 அன்று அரசியலில் இனம், சமயம் குறித்து தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் வெளியிட்ட அமைச்சர்நிலை அறிக்கைக்குப் பதிலளித்த திரு சிங், ஆரம்பத்தில் கூறியதற்கு மாறாக, பாட்டாளிக் கட்சித் துணைத் தலைவர் ஃபைசல் மனாப், ஒரு சமய ஆசிரியரால் அழைக்கப்பட்ட பின்னர் திரு நூர் கலந்துகொள்வார் என்று கூட்டத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தெரிவிக்கப்பட்டது என்றார்.

அமைச்சர்நிலை அறிக்கை வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு, அக்டோபர் 21 அன்று, திரு ஃபைசல், சந்திப்பு குறித்த வாட்ஸ்அப் செய்திகளைக் காட்டியபோதுதான், இந்த உண்மை தனக்குத் தெரியவந்ததாக திரு சிங் விவரித்தார்.

“இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் இந்த விவரம் எனக்குத் தெரியாது. கடந்த மாதமும் அமைச்சர்நிலை அறிக்கை குறித்த பரிமாற்றத்தின் போதும் எனக்குத் தெரியாது,” என்று எதிர்க்கட்சித் தலைவருமான திரு சிங் கூறினார்.

ஏப்ரல் கூட்டத்தில் திரு நூரின் வருகை பற்றி திரு சிங்குக்கு எவ்வாறு தெரியவந்தது என்பதை தெளிவுபடுத்துவதற்காக, நாடாளுமன்ற அவைத் தலைவர் இந்திராணி ராஜா நவம்பர் 4ஆம் தேதி ஒரு திடீர் அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தலில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சி வேட்பாளர்களிடம் பேசியதாகவும், சிங்கப்பூரில் உள்ள மலாய்/முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் கவலைகளுக்கு முன்னுரிமை அளிக்க எதிர்க்கட்சியை வலியுறுத்தியதாகவும் திரு நூர் கூறினார் என்ற தகவல் வெளியானதால், இந்தச் சந்திப்பு சர்ச்சைக்குரியதாக மாறியது.

குமாரி இந்திராணிக்குப் பிறகு பேச எழுந்த திரு சிங், குமாரி இந்திராணியின் அமைச்சர்நிலை அறிக்கைக்கு முன்னதாக, திங்கட்கிழமை (நவம்பர் 3) இரவு நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங்கிடம், அவர் நாடாளுமன்றத்தில் முன்பு தெரிவித்த சில தகவல்கள் தவறானவை என்றும், சரியான தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டியவை என்று தெளிவுபடுத்த விரும்புவதாகவும் கூறினார்.

நாடாளுமன்றக் குழுவிடம் பொய் சொன்னதற்காக விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணையின்போது, ​​மதிய உணவு இடைவேளையில், திரு சிங், உயர் நீதிமன்றத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குச் சென்றார்.

அரசியல் ஆதரவிற்காக திரு ஃபைசல் அல்லது பாட்டாளிக் கட்சியின் மலாய்/முஸ்லிம் வேட்பாளர்கள் எந்த வாக்குறுதிகளையும் அல்லது உறுதிமொழிகளையும் வழங்கவில்லை என்றும் திரு சிங் மீண்டும் வலியுறுத்தினார்.

அதனால்தான் தவறான எண்ணத்தை சரிசெய்ய நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட விளக்கத்தை அளிக்க முன்வந்ததாக திரு சிங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்