வடக்கு-கிழக்கு ரயில் பாதை, செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி மின்கட்டமைப்பு மேம்பாடு

வடக்கு-கிழக்கு ரயில் பாதை, செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி மின்கட்டமைப்பு மேம்பாடு

2 mins read
55559bf9-3e61-47d7-a9ea-42500cd0fedc
புதிய மேம்பாடுகளின்மூலம், மின்விநியோகம் தொடர்பில் ஏற்பட வாய்ப்புள்ள ரயில் சேவைத் தடங்கல்கள் குறைந்து, நம்பகத்தன்மைமிக்க ரயில் சேவையைப் பயணிகள் எதிர்பார்க்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வடக்கு - கிழக்கு பெருவிரைவு ரயில் பாதையிலும் செங்காங் - பொங்கோல் இலகு ரயில் பாதையிலும் மின்விநியோகக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன.

அந்த மேம்பாட்டுப் பணிகள் 2027ஆம் ஆண்டு தொடங்கி, 2030களின் நடுப்பகுதிக்குள் கட்டங்கட்டமாக நிறைவுபெறும்.

இந்தப் புதிய மேம்பாடு, தற்போதைய கட்டமைப்பைவிட திறன்மிக்க மற்றும் மாற்று மின் ஏற்பாடுகளை வழங்கும் என நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை (ஜூலை 1) தெரிவித்தது.

இதனால், மின்விநியோகம் தொடர்பில் ஏற்பட வாய்ப்புள்ள ரயில் சேவைத் தடங்கல்கள் குறைந்து, நம்பகத்தன்மைமிக்க ரயில் சேவையைப் பயணிகள் எதிர்பார்க்கலாம்.

மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி கடந்த மே 18ஆம் தேதி விடுக்கப்பட்டது. விண்ணப்பம் செய்வதற்கு செப்டம்பர் 30 இறுதி நாள்.

கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் செங்காங் பணிமனையில் ஏற்பட்ட மின்மாற்றிப் பழுதினால் வடக்கு - கிழக்கு ரயில் சேவை 3 மணி நேரமும், செங்காங் - பொங்கோல் எல்ஆர்டி சேவை 10 மணி நேரமும் பாதிக்கப்பட்டது.

இத்தகைய நீடித்த முடக்கங்களைத் தவிர்க்கும் நோக்கில், திட்டமிடப்பட்ட காலத்திற்கு மூவாண்டுகள் முன்னதாகவே மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின்கீழ், செங்காங் ரயில் பணிமனையில் உள்ள மின்கொள்திறன் கட்டமைப்பின் தரம் உயர்த்தப்படுவதுடன், கூடுதல் துணை மின்னிலையங்களும் நிறுவப்படும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

எதிர்காலத்தில் கூடுதல் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், நகரின் மையப்பகுதியில் மற்றொரு மாற்று மின்கொள்திறன் கட்டமைப்பை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு குறைந்தது எட்டு ஆண்டுகள் தேவைப்படுவது நியாயமானதுதான் என்று சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் இணைப் பேராசிரியர் ஆண்ட்ரூ இங் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், ரயில்கள் இயங்காத நள்ளிரவு நேரங்களில் மட்டுமே சோதனைகளையும் கருவிகளை நிறுவும் பணிகளையும் மேற்கொள்ள முடியும்.

எனவே, கருவிகளை மாற்றி அமைக்கும் நாள்களில் ரயில் சேவை வழக்கத்தைவிட முன்னதாகவே நிறுத்தப்படவோ அல்லது காலையில் தாமதமாகத் தொடங்கப்படவோ வாய்ப்புள்ளது.

அதனால் ஏற்படும் பயண அசௌகரியங்களைக் குறைக்க பணிகள் கவனத்துடன் பல கட்டடங்களாகத் திட்டமிடப்படும் என்றும் சேவை மாற்றங்கள் குறித்துப் பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனமும் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்எம்ஆர்டிஎல்ஆர்டிரயில் சேவைமேம்பாடு