வடக்கு கிழக்கு எம்ஆர்டி வழித்தடத்தில் (NEL) மின்சார விநியோக முறையை புதுப்பிக்கும் பணிகள் இவ்வாண்டு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கான தீர்வுகளில் ஒன்றாக மின் விநியோகப் புதுப்பிப்பை பணிக்குழு ஒன்று பரிந்துரைத்தது. அதனை அரசாங்கம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) ஏற்றுக்கொண்டது.
புதுபிப்புப் பணிகளில் ஒன்றாக, செங்காங்கில் உள்ள அந்த எம்ஆர்டி நிறுவனத்தின் பணிமனையில் உள்ள மின் உள்வாங்கும் நிலையம் மேம்படுத்தப்படும்.
அந்த நிலையத்தில் இருந்துதான் ரயில் வழித்தடத்திற்கான மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. அதிக மீள்திறன் கொண்ட நிலையமாக அது மாற்றம் பெறும்.
மின் விநியோக முறை புதுப்பிப்பு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதால், அதற்கு ஏற்ப சேவைகளை நீண்டநேரம் மூடவேண்டிய அவசியம் ஏற்படும்.
இதனை நிலப் போக்குவரத்து ஆணையமும் ரயில் சேவை வழங்கும் நிறுவனங்களான எஸ்எம்ஆர்டி மற்றும் எஸ்பிஎஸ் டிரான்சிட்டும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
ரயில் நம்பகத்தன்மைக்கான பணிக்குழுவில் அந்த மூன்று அமைப்புகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.
அதிக மீள்திறன் கொண்ட மின்சேமிப்பு முறையை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை உள்ளதாக அந்தப் பணிக்குழு ஏற்கெனவே தனது அறிக்கையில் பரிந்துரைத்து இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அந்த அறிக்கை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்விடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ரயில் உடைமைகளை மேம்படுத்துவதோடு ரயில் சேவை இடையூறுகளின்போது சேவை மீட்புத் திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட வேறு சில பரிந்துரைகளையும் குழு பரிந்துரைத்து இருந்தது.
உதிரிபாகங்கள் பராமரித்தல், ரயில் கட்டமைப்பு நிலவரத்தைக் கண்காணிக்கும் முறையைத் தரப்படுத்துதல், ரயில் ஊழியரணியை சிறந்த முறையில் ஊக்குவித்தல் போன்ற பரிந்துரைகளும் பணிக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக எம்ஆர்டி வழித்தடத்தில் மூன்று மணி நேரம் சேவைகள் தடைபட்டன. அத்துடன், எல்ஆர்டி வழித்தடத்தில் 10 மணி நேரம் சேவைத் தடங்கல் ஏற்பட்டது.

