அதிக சத்தத்தையும் தூசியையும் ஏற்படுத்துவதாகக் கூறப்படும் வடக்கு-தெற்கு பாதைக்கான (North-South Corridor) பெரும்பாலான முக்கியக் கட்டமைப்புப் பணிகள் 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என்று போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.
நிலத்தின் மேற்பரப்பிலுள்ள கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் இதனால் அடுத்த ஆண்டு முதல் மேற்பரப்பு நிலைமைகள் மேம்படத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
நிலப் போக்குவரத்து ஆணையம் 2028 முதல் சாலைகளையும் வழித்தடங்களையும் பாதிக்கப்பட்ட பிற இடங்களையும் மீண்டும் சீரமைக்கும்.
எடுத்துக்காட்டாக, லென்டோர் அவென்யூ, செம்பவாங் சாலை ஆகியவற்றின் மேற்பரப்பு நிலைமை 2028ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) நாடாளுமன்றத்தில் வடக்கு-தெற்கு பாதைக்கான திட்டத்தின் தாமதம் குறித்த கேள்விகளுக்குத் திரு சியாவ் பதிலளித்தார்.
எடுத்துக்காட்டாக, ஜாலான் பெசார் குழுத்தொகுதியைச் சேர்ந்த டெனிஸ் புவா, நீ சூன் குழுத்தொகுதியைச் சேர்ந்த லீ ஹுய் யிங் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தத் தாமதத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள், வணிகங்கள் ஆகியவற்றுக்கு என்ன உதவி வழங்க முடியும் எனக் கேட்டனர்.
கட்டுமானப் பாதையில் உள்ள வணிகங்கள் மீது அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துவார்கள் என்றும் மேற்பரப்புப் பணிகள் முடிந்ததும் நடையர்களுக்கான பாதைகளை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் திரு சியாவ் பதிலளித்தார்.
ஏனெனில், பாதசாரிகளின் பாதைகள் அல்லது சாலைகளில் ஏற்படும் மாற்றங்கள் அக்கம்பக்கத்து வணிகங்களுக்கான வாடிக்கையாளர் வருகையைப் பாதிப்பதால். கடைகள், உணவகங்கள் ஆகியவற்றுக்கு நேரடியான வழித்தடங்களை அமைக்கவும், வாடிக்கையாளர்கள் கடைகளுக்குச் செல்வதை எளிதாக்கவும் நிலப்போக்குவரத்து ஆணையம் முயலும் எனத் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு-தெற்கு பாதைக்கான கட்டுமானப் பணிகளால் பேரளவில் பாதிக்கப்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாடகைக் கடைகளில் உள்ள பல வணிகங்கள், பரிசீலனையின் அடிப்படையில் வாடகைத் தள்ளுபடிகளைப் பெற்று வருவதாகவும் அதற்கான தகுந்த காரணங்கள் இருந்தால் கழகம் தொடர்ந்து அந்தத் தள்ளுபடிகளை வழங்கும் என்றும் திரு சியாவ் கூறினார்.
பொதுவான கொள்கையாக திட்டத் தாமதங்களுக்காக அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்லை. ஏனெனில் அது இந்தத் திட்டங்களுக்கு முன்கூட்டியே குறிப்பிடத்தக்க செலவுகளைச் சேர்க்கக்கூடும் என்று அவர் கூறினார்.
இந்தத் தாமதத்தால் திட்டச் செலவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது, ஆனால் ஒப்பந்தத்தின்படி அனுமதிக்கப்படக்கூடிய கோரிக்கைகளின் அளவை நிலப் போக்குவரத்து ஆணையம் இன்னும் மதிப்பிட்டு வருவதால், தற்போதைய நிலையில் புதுப்பிக்கப்பட்ட திட்டச் செலவை வழங்க முடியாது என்று திரு சியாவ் கூறினார்.
