கட்டுமானச் சவால்களால் வடக்கு-தெற்குப் பாதை திறப்பில் ஈராண்டுத் தாமதம்

கட்டுமானச் சவால்களால் வடக்கு-தெற்குப் பாதை திறப்பில் ஈராண்டுத் தாமதம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Sep 2026 - 7:38 pm

2 mins read

நாட்டின் வடக்குப் பகுதிகளை நகர மையத்துடன் இணைக்கும் 21.5 கிலோமீட்டர் நீளமுள்ள வடக்கு-தெற்குப் பாதையின் கட்டுமானத்தில் ஏற்பட்ட எதிர்பாராச் சிக்கல்களால் ஈராண்டுத் தாமதமாகவே அது சேவை வழங்கத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்மிரல்டி வெஸ்ட்டிலிருந்து லென்டோர் அவென்யூ வரை செல்லும் வடக்கு-தெற்குப் பாதை 2029ஆம் ஆண்டிலிருந்து கட்டங்கட்டமாகத் திறக்கப்படும். முன்னதாக அது 2027ல் திறக்கப்படும் எனக் கூறப்பட்டது.

அதேபோல் லென்டோர் அவென்யூவிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே வரையிலான சுரங்கப் பகுதி 2031ஆம் ஆண்டிலிருந்து கட்டங்கட்டமாகத் திறக்கப்படும். முன்னர் அது 2029ல் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

நிலப் போக்குவரத்து ஆணையம், வியாழக்கிழமை (செப்டம்பர் 17) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கட்டுமானப் பணிகளால் பாதிக்கப்பட்ட அந்த வட்டாரச் சாலைகளும் நடைபாதைகளும் 2028ஆம் ஆண்டு முதல் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும் என்றும் இரைச்சலைத் தடுக்கும் அமைப்புகள் அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சுரங்கப் பகுதிக் கட்டுமானத்தால் பாதிக்கப்படும் நடையர்க்கான மேம்பாலங்கள் 2029லிருந்து மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்படும்.

8.8 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பாலம், 12.3 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பகுதி ஆகியவற்றுக்கான அடித்தளப் பணிகளில் 90 விழுக்காட்டுக்குமேல் நிறைவுபெற்றிருப்பதாக ஆணையம் தெரிவித்தது.

கட்டுமானப் பணிகளின் முக்கியக் கட்டங்களில் தாமதம் நேர்ந்ததால் அவை திறக்கப்படும் தேதி தள்ளிப்போவதாக அது கூறியது.

திட்டத்தின் மிகவும் சிக்கலான பொறியியல் கட்டத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து செப்டம்பர் 8ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஆணையம் விவரித்தது.

கம்பாஸ் அவென்யூ, உட்லண்ட்ஸ் அவென்யூ 8லும் எதிர்பார்க்கப்படாத பாறை அடுக்குகள் இருந்ததால், திட்டமிட்டதைவிட ஆழமாகத் தூண்களை நிறுவ வேண்டியிருந்தது.

நொவீனா பகுதியில் உடைந்த பாறைகள், நிலத்தடி நீர்க் கசிவு காரணமாக கூடுதல் ஆயத்தப் பணிகள் தேவைப்பட்டன. குறிப்பாக, இயங்கி வரும் வடக்கு-தெற்கு ரயில் பாதைக்கு 1 மீட்டர் தொலைவில் இச்சுரங்கப்பாதை அமைவதால், பாதுகாப்பை உறுதிசெய்ய மாறுபட்ட சுரங்கம் தோண்டும் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

தாம்சன் பகுதியில் நிலத்தடியில் கடுமையான பாறை அமைப்புகள் இருந்ததால், தோண்டுவதற்குமுன் பாறைகளை வெடிவைத்துத் தகர்க்கவும் நிலத்தை உறுதிப்படுத்தவும் வேண்டியிருந்தது.

கட்டுமானப் பணிகள் நிறைவுறும் தேதி மீண்டும் தள்ளிப்போகுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஆணையத்தின் பேச்சாளர், பணிகளை ஆணையம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் எஞ்சியுள்ள பணிகளை நிர்வகிக்கவும் சவால்களைச் சமாளிக்கவும் குத்தகைதாரர்களுடன் ஆணையம் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்