மின்னல் தாக்கியதால் ஜூன் 3ல் வடக்கு-தெற்கு தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

மின்னல் தாக்கியதால் ஜூன் 3ல் வடக்கு-தெற்கு தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

2 mins read
af2c73ee-25e1-4b86-b12e-e3453f966ec8
வடக்கு-தெற்கு தடத்தில் ரயில் சேவை பாதிப்பால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூன் 3ஆம் தேதி வடக்கு-தெற்கு தடத்தில் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. அதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

மின்னல் தாக்கியதால் தான் சேவை பாதிக்கப்பட்டதாகவும் ஐந்து ஆண்டுகளில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட முதல் சேவை பாதிப்பு இது என்றும் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.

ரயில் சேவை பாதிப்பு குறித்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) அன்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக பதில் கொடுத்தார் அமைச்சர் சீ.

“கிராஞ்சி மற்றும் மார்சிலிங் இடையிலான ரயில் தடம் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் கொண்டது. இதற்கு முன்னால் அப்பகுதியில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல்கள் தடத்தில் உள்ள கருவியை கொஞ்சம் கொஞ்சமாக பாதித்துள்ளது. ஜூன் 3ஆம் தேதி அன்று ஏற்பட்ட மின்னல் தாக்குதல் கருவியை முழுமையாக பாதித்தது. அதனால் தடத்தில் மின்சாரம் இல்லாமல் போனது. அது ரயில் சேவை பாதிப்பை ஏற்படுத்தியது,” என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட கருவி மாற்றப்பட்டுள்ளது என்றும் தடத்தில் உள்ள மற்ற கருவிகள் நல்ல நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் சீ குறிப்பிட்டார்.

கருவிகளின் பராமரிப்பு குறித்து எஸ்எம்ஆர்டி நிறுவனத்துடனும் கருவியை உருவாக்கிய நிறுவனத்துடனும் அதிகாரிகள் பேசி வருவதாக அவர் கூறினார்.

ரயில் தடங்களில் உள்ள மின்னல் தாக்குதலைத் தடுக்கும் கருவிகள் உள்ளூர் தரத்திற்கும் உலகத் தரத்திற்கும் ஏற்றவை என்று நினைவூட்டிய அமைச்சர் சீ, பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்