ஓஸ்லோ: நார்வேயில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் மூவர் மாண்டனர்.
சாலையிலிருந்து விலகிச் சென்ற அப்பேருந்து, நார்வே பெருநிலத்திலிருந்து லோஃபோட்டன் தீவுக்கூட்டத்தைப் பிரிக்கும் ரஃப்சண்டேக்கு அருகில் இருக்கும் ஏரியில் பகுதியளவு மூழ்கியது.
விபத்தில் 58 பேர் பாதிக்கப்பட்டதாக நார்வே காவல்துறை கூறியது.
இதற்கிடையே, அப்பேருந்தில் இருந்த சிங்கப்பூரர்களுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால், காயமடைந்த சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையை அது தெரிவிக்கவில்லை.
பேருந்தில் இருந்த சிங்கப்பூரர்கள் யாரும் மரணமடையவில்லை என்று அது கூறியது.
காயமடைந்த சிங்கப்பூரர்களுக்கு நார்வே தலைநகர் ஓஸ்லோவில் உள்ள சிங்கப்பூரின் கௌரவத் தூதர் மூலம் உதவி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்தது.
நார்வே அதிகாரிகளுடன் சிங்கப்பூரின் கௌரவத் தூதர் இணைந்து செயல்படுவதாக அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
விபத்தில் குறைந்தது ஒரு சிங்கப்பூரர் காயமடைந்ததாக நார்வே ஊடகம் செய்தி வெளியிட்டது.
விபத்து நிகழ்ந்த பகுதியின் நகராட்சி மன்றம் அவசரகால மீட்புப் பணியாளர்களை உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பியதாக சிங்கப்பூரில் உள்ள நார்வே தூதரகம் தெரிவித்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத பயணிகளுக்கும் உதவி சென்றடைவதை நார்வே அதிகாரிகள் உறுதி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்து நிகழ்ந்தபோது பேருந்தில் சிங்கப்பூர், இந்தியா, சீனா, பிரான்ஸ், மலேசியா, நெதர்லாந்து, நார்வே, தென்சூடான் போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்ட சில பயணிகள் அருகில் இருந்த பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மூன்று பேர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் வானிலை மோசமாக இருப்பதாகவும் மீட்புப் பணிகளை அது பாதித்ததாகவும் நார்வே அதிகாரிகள் கூறினர்.
காயமடைந்தோருக்குச் சிகிச்சை வழங்குவதற்கு முன்னுரிமை தரப்படுவதாகவும் விபத்து நிகழ்ந்ததற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்றும் நார்வே காவல்துறை தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டது.
பேருந்தில் பயணம் செய்த அனைத்துப் பயணிகளின் விவரங்களைக் கொண்ட பட்டியல் முழுமையாக இல்லாததால் பாதிப்படைந்தோரின் குடும்பத்தினருடன் தொடர்புகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நார்வே அதிகாரிகள் கூறினர்.