தென்கிழக்காசியாவிலும் ஆசிய பசிபிக் வட்டாரத்திலும் கரிமச் சேகரிப்பு, அகற்றத் திட்டங்களுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு குறித்த கண்ணோட்டத்தைத் தந்தது ‘நார்தன் பாத்ஃபைண்டர்’ எனும் கப்பல்.
ஊதா, நீலம் கலந்த பச்சை வண்ணங்கள் கொண்ட அது, ஜனவரி 16, 17ஆம் தேதிகளில் தஞ்சோங் பகார் முனையத்தில் அணைந்திருந்தது.
சீனக் கப்பல் கட்டுமிடம் ஒன்றில் கட்டப்பட்ட அக்கப்பல் 130 மீட்டர் நீளம் கொண்டது. அதன் நடுப்பகுதியில் ஏறக்குறைய 8,000 டன் திரவநிலைக் கரியமில வாயுவை நிரப்பக்கூடிய இரண்டு தொட்டிகள் அமைந்துள்ளன.
தனது முதல் பயணத்தை மேற்கொண்டு நார்வே செல்லும் வழியில் அது சிங்கப்பூர் வந்திருந்தது.
அது எடுத்துச்செல்லும் திரவநிலைக் கரியமில வாயு, இடைக்காலச் சேமிப்பு நிலையத்தில் சேமித்துவைக்கப்படும். பின்னர், வடக்குக் கடலின் கடற்படுகையிலிருந்து பல கிலோமீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்டகத்தில் அது புதைக்கப்படும்.
இயற்கை ஏரிவாயுவில் இயக்கப்படும் அக்கப்பல் சிங்கப்பூரில் மறுமுறை எரிவாயுவை நிரப்பிக்கொண்டது.
உலகின் முதல், எல்லை கடந்த கரிமச் சேகரிப்பு,, சேமிப்புக்கான ‘நார்தன் லைட்ஸ்’ திட்டத்தின் ஓர் அங்கமாக விளங்குகிறது ‘நார்தன் பாத்ஃபைண்டர்’ கப்பல்.
எரிசக்தி, எண்ணெய், எரிவாயுப் பெருநிறுவனங்களான ‘ஷெல்’, ‘டோட்டல்எனர்ஜிஸ்’, ‘இக்குவினார்’ ஆகியவை இணைந்து ஐரோப்பாவில் வர்த்தக ரீதியில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
கரியமில வாயுவை வெளியேற்றும் நாடுகளிலிருந்து அதைச் சேகரித்து, சேமித்து வைக்கும் நாடுகளுக்குக் கப்பல் மூலம் எடுத்துச் செல்லும் முறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஷெல் நிறுவனம் கூறியது.
குழாய் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்புவதைவிட கப்பல் மூலம் அனுப்புவது மேலும் இணக்கமான முறை என்று அது குறிப்பிட்டது.
‘ஷெல்’, ‘எக்ஸான்மொபில்’ நிறுவனங்கள் இணைந்து சிங்கப்பூர் அரசாங்கத்தின் பங்காளித்துவத்துடன் கரிமச் சேகரிப்பு, சேமிப்புத் திட்டங்களில் ஈடுபட முனைந்துள்ளன.
2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 2.500 டன் கரியமில வாயுவைக் கடற்படுகைக்கு அடியில் சேமிக்கும் திட்டத்தை அவை ஆராய்ந்துவருகின்றன. சேமிப்புப் பெட்டகம் அமைப்பதற்கு புருணை, மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை ‘ஷெல்’ மதிப்பிட்டுவருகிறது.

