தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்ல தடைவிதித்தால் தொழில் பாதிக்கப்படும் என நிறுவனங்கள் கவலை

2 mins read
13e6cadc-11ef-423a-9d3d-cebc86d507dd
தொழில் பாதிக்கப்பட்டால் பல்வேறு கட்டுமானத் திட்டங்களில் தாமதம் ஏற்படும் என நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஊழியர்களை ஏற்றிச் செல்ல லாரிகளைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடைவிதிக்கும் பட்சத்தில் தொழிலில் பாதிப்பு ஏற்படும் என  முதலாளிகள் கவலையடைந்துள்ளதாகப் பல அரசாங்க அமைப்புகள் புதன்கிழமை காலை தெரிவித்தன.

“நிறுவனங்களின் தொழில் பாதிக்கப்பட்டால், புதிய வீடுகள் கட்டும் திட்டம், பலதுறை மருந்தகங்களும் ரயில் பாதைகளும் அமைக்கும் திட்டம் போன்றவற்றில் தாமதம் ஏற்படும்.

“இதனால், சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் செலவுகள் அதிகரிப்பதோடு சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படும்.

“மேலும், பெரும்பாலான சிங்கப்பூர் ஊழியர்களும் வெளிநாட்டு ஊழியர்களும் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும்,” என அதிகாரிகள் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

போக்குவரத்து அமைச்சு, நிலப் போக்குவரத்து ஆணையம், மனிதவள அமைச்சு,  கட்டட, கட்டுமான ஆணையம், சிங்கப்பூர் தொழில் மேம்பாட்டு ஆணையம், உள்துறை அமைச்சு, சிங்கப்பூர் காவல்துறை போன்றவை கூட்டாக இணைந்து இந்தச் செய்தியை வெளியிட்டன.

ஜூலை 18, 19 தேதிகளில் நிகழ்ந்த லாரிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளில் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட 37 பேர் காயமடைந்ததால், பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துமாறு பல்வேறு அமைப்புகள் மீண்டும் குரல் எழுப்பின.

அதனைத் தொடர்ந்து அரசாங்கம் ஊழியர்களை ஏற்றிச் செல்ல லாரிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப் பரிசீலித்து வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

கடந்த பதினைந்து நாள்களில், ஊழியர்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளும் தனிமனிதர்களும் கூட்டாக கையொப்பமிடப்பட்ட இரு மனுக்கள் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டன.

இதற்கிடையே, ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச்செல்லும் நடைமுறையை மாற்றுவதாக இருந்தால் ‘கவனமாகப் பரிசீலனை’ செய்யும்படி இருபதுக்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் செவ்வாய்க்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டன. ஊழியர்களின் போக்குவரத்தில் ‘உண்மையான, நடைமுறைச் சிக்கல்கள்’ இருப்பதாக அரசாங்கத்திடம் அவை எடுத்துரைத்தன.

தங்கள் ஊழியர்களை ஏற்றிச்செல்ல மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளில் கவனம் செலுத்துமாறு நிறுவனங்களையும் தொழிற்சங்கங்களையும் அரசாங்கம் ஊக்குவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்