தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்களைப் புரிந்துகொள்ளாதவன் அல்ல: திரு தினே‌ஷ் வாசு தாஸ்

2 mins read
b2bf1d0c-c374-4b0f-b34c-7dffcea86a7f
புதிய நாடாளுமன்ற உறுப்பினர் தினே‌ஷ் வாசு தாஸ் ராணுவ  பின்னணி கொண்டவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மே 3 பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்லும் ஒருசில புதுமுகங்களில் முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் தினே‌ஷ் வாசு தாசும் ஒருவர்.

மக்கள் செயல் கட்சி நீண்டகாலமாக அரசியல் திறனாளர்களை ராணுவப் பதவிகள் வகிப்போரிடையே அடையாளம் கண்டுள்ளது.

ஆனால் முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்குச் சாதாரண குடிமக்களுடன் தொடர்பில் இருக்கக்கூடிய அடித்தள அனுபவம் இருக்கிறதா என்று அண்மை ஆண்டுகளில் குறைகூறப்படுகிறது.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற இடத்தை வென்ற 50 வயது திரு தினே‌ஷ், அடிப்படை மக்களுடைய அனுபவத்தை உணராத ராணுவ வீரர் அல்ல என்று கூறினார்.

“தலிபான் என்மீது 18 எறிபடைகளைப் பாய்ச்சியிருக்கிறது. உண்மையான போர் என்றால் என்ன என்பதை நான் பார்த்திருக்கிறேன்,” என்றார் அவர்.

2009ஆம் ஆண்டு திரு தினே‌ஷ் எட்டு மாதங்கள் ஆப்கானிஸ்தானில் சேவையாற்றினார். அங்கிருந்தபோது பல்வேறு தாக்குதல்களை அவர் எதிர்கொண்டார். ஒருமுறை அவர் தங்கியிருந்த அறையிலிருந்து சில மீட்டர் தொலைவில் எறிபடை விழுந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

“முதலில் வெடிச்சத்தம் கேட்கும். ஐந்து நிமிடம் கழித்து மண்ணும் சிதைவுகளும் எங்கள்மேல் விழும். அழுத்தம் என்றால் என்ன என்பதை அது கற்றுத்தந்தது,” என்றார் திரு தினே‌ஷ்.

டச்சு நேட்டோ படைகளுடன் ஆஃப்கானிஸ்தானில் திரு தினே‌ஷ் வாசு சேவையாற்றினார்.
டச்சு நேட்டோ படைகளுடன் ஆஃப்கானிஸ்தானில் திரு தினே‌ஷ் வாசு சேவையாற்றினார். - படம்: தினே‌ஷ் வாசு தாஸ்

அது அடிப்படையில் தமது மீள்திறனையும் கடமையுணர்ச்சியையும் உருவாக்கியது என்ற திரு தினே‌ஷ், அத்தகைய பண்புகள் அரசியலுக்கும் முக்கியம் என்றார்.

“அரசியல்வாதிகளுக்குப் பயிற்சிப் பள்ளிகள் என்று எதுவும் இல்லை. எங்கள் அனைவருக்கும் இது புதிது. எனவே, அந்தக் குறிப்பிட்ட ஆளைக் கவனிக்க வேண்டுமே தவிர அவரது கடந்த கால பணியை அல்ல,” என்று திரு தினே‌ஷ் குறிப்பிட்டார்.

ராணுவத் தலைவர்கள், குறிப்பாக அதிக அழுத்தத்திலும் மாறுபட்ட சூழல்களிலும் பணியாற்றியவர்களுக்கு அரசாங்கத்தில் பயன்படுத்தத் தேவைப்படும் உத்திபூர்வ யோசனை, அமைதி போன்ற திறன்களைக் கொண்டிருப்பார்கள் என்று திரு தினே‌ஷ் சொன்னார்.

ஆப்கானிஸ்தானில் சேவையாற்றியதைத் தவிர 2018ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பின்போதும் திரு தினே‌ஷ் தரைத் தளபதியாகப் பொறுப்பு வகித்தார்.

2015ஆம் ஆண்டு சிங்கப்பூரின் முதல் பிரதமர் அமரர் லீ குவான் யூவின் அரசாங்க இறுதிச்சடங்கில் சவப்பெட்டியைச் சுமந்த அதிகாரிகளில் ஒரே இந்தியராக இருந்தார் திரு தினே‌‌ஷ்.

குறிப்புச் சொற்கள்