மோசமான பருவநிலையில் வேலையை நிறுத்த விதிமுறைகளைப் புகுத்துவது நடைமுறைக்கு ஒத்துவராது என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
பருவநிலை ஒரே மாதிரியாக இருக்காது, மாறுபட்டிருக்கும், வெவ்வேறான வேலையிடங்களில் வெவ்வேறான விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்தச் சூழலில் அமைச்சு வேலையை நிறுத்த உத்தரவிடுவது நடைமுறைக்கு ஒத்துவராது என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது புதன்கிழமை (அக்டோபர் 16) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மோசமான வானிலையில் ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
2024ஆம் ஆண்டில் ஏற்கெனவே பல சீரற்ற வானிலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் இடியுடன்கூடிய மழை, செப்டம்பரில் சுமத்ரா சூறாவளியால் வீசிய பலத்த காற்று, மே மாதத்தில் அதிக வெப்பநிலை போன்றவை அடங்கும்.
தொழிற்சங்க நாடாளுமன்ற உறுப்பினரான மெல்வின் வோங் (ராடின் மாஸ்) பருவநிலை மாற்றத்தால் ஒழுங்கற்ற வானிலை பொதுவானதாக மாறி வருவதாகக் கூறினார்.
வேலையிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில் பருவநிலை விளைவால் வேலையிடங்களில் ஏற்படும் தாமதங்களை அமைச்சு எப்படி நிர்வகிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மோசமான பருவநிலை வெவ்வேறு வேலையிடங்களை வெவ்வேறு வகையில் பாதிக்கிறது. எப்போது வேலை நிறுத்த வேண்டும் என்று அமைச்சு வழிகாட்டிகளை கொண்டுவருவது சவாலானது என்று திரு ஸாக்கி குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வெவ்வேறு கட்டுமானத் தளங்கள் வெவ்வேறு வகையில் செயல்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
சில இடங்களில் அதிக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில இடங்கள் உடலுழைப்பை அதிகம் நம்பியிருக்கின்றன.
நிறுவனத்தின் தேவைகளைப் பொறுத்து வெவ்வேறான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்புடையதாக இருக்கும்.
“அபாய மதிப்பீடுகளைச் செய்வது முதலாளி மற்றும் கட்டுமானத் தளங்களை வைத்திருப்பவர்களின் கடமையாகும்,” என்றார் அவர்.
ஆனால், சீரற்ற வானிலையால் ஊழியர்கள் மீதான தாக்கங்களை மனிதவள அமைச்சு ஆராயும். இதன் தொடர்பில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க அறிவியல் ஆதாரங்களையும் பார்க்க வேண்டும் என்று திரு ஸாக்கி மேலும் கூறினார்.

