சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான ஜிஐசியும் தெமாசெக் நிறுவனமும் இந்தோனீசியப் பங்குச் சந்தையின் நிலையைக் குறைப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு குறியீட்டை வகைப்படுத்தும் ‘எம்எஸ்சிஐ’ அமைப்புக்குத் தங்களோ தங்களின் ஊழியர்களோ நெருக்குதல் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைச் நிராகரித்துள்ளன.
இந்தோனீசியாவின் நிலையைக் குறைக்குமாறு இரு நிறுவனங்களும் அமைப்பை வற்புறுத்தியதாக அந்நாட்டின் முன்னாள் வர்த்தக அமைச்சர் முகம்மது லுட்ஃபி செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) குற்றஞ்சாட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து அந்நிறுவனங்களின் மறுப்பு வந்துள்ளது.
பங்குச் சந்தையில் நிலையை இறக்கினால் அது பதற்றத்தை உருவாக்கி, இந்தோனீசியப் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று முன்னாள் அமைச்சர் வாதிட்டார்.
ஜிஐசி நிறுவனத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் இதுகுறித்துக் கருத்துரைத்தார்.
“எங்களின் முதலீட்டு முடிவுகள், குறியீட்டு வகைப்பாடு அல்லது சந்தை குறித்த மேலெழுந்தவாரியான பார்வைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை; மாறாக நிறுவனம், சொத்து சார்ந்த அடிப்படை அம்சங்களின் நிலையில் அவை எடுக்கப்படுகின்றன.
30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு சொத்துப் பிரிவுகளில் நாங்கள் இந்தோனீசியாவில் முதலீடு செய்து வருகிறோம்; ஆபத்துகளைச் சமாளித்து, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களில் தொடர்ந்து முதலீடு செய்வோம்,“ என்று அவர் கூறினார்.
தெமாசெக் குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அமைப்பின் சீனா, இந்தியாவைத் தவிர்த்த ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கான தலைவர் ஃபாக் வாய் ஹூங், தங்கள்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
“இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் இவை முற்றிலும் உண்மையற்றவை,” என்றார் அவர்.
இந்தோனேசியப் பங்குச் சந்தையின் முதன்மை இயக்குநர் ஜெஃப்ரி ஹென்ட்ரிக், எம்எஸ்சிஐ அமைப்பின் தற்சார்புத்தன்மையை ஆதரித்துப் பேசினார்.
“உலக அளவில் குறியீடுகளை வெளியிடும் அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றன என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம், தொடர்ந்து நம்புவோம்,“ என்று ஜகார்த்தாவில் உள்ள இந்தோனீசியப் பங்குச் சந்தைக் கட்டடத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
