தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2024 முதல் நோவாவேக்ஸ் கொவிட்-19 தடுப்பூசி சிங்கப்பூரில் கிடைக்காது

1 mins read
073da8ca-6aff-4470-ae8e-f99b127bb240
நோவாவேக்ஸ் அதன் புதுப்பிக்கப்பட்ட கொவிட்-19 XBB.1.5 தடுப்பூசி தயாரிப்பிற்கான ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

நோவாவேக்ஸ் கொவிட்-19 தடுப்பூசியானது 2024ஆம் ஆண்டு முதல் தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் கிடைக்காது எனச் சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அதனால், முதல் தவணை நோவாவேக்ஸ் தடுப்பூசியைப் பெற விரும்பும் தகுதியுள்ளவர்கள் வரும் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் அதைப் பெற வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதல் தவணைத் தடுப்பூசியைப் பெற்றவர்கள், டிசம்பர் 31க்குள் இரண்டாவது தவணையை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தற்போதுள்ள நோவாவேக்ஸ் தடுப்பூசியின் இருப்பு வரும் டிசம்பர் 31ஆம் தேதியுடன் காலாவதியாவதாலும் அசல் கொவிட்-19 திரிபை அடிப்படையாகக் கொண்ட அதன் தற்போதைய தயாரிப்பு இனி உற்பத்தியாளரால் வழங்கப்படாது என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உயிர்த்தொழில்நுட்ப நிறுவனமான நோவாவேக்ஸ், அதன் புதுப்பிக்கப்பட்ட கொவிட்-19 XBB.1.5 தடுப்பூசி தயாரிப்பிற்கான ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தடுப்பூசியைப் பெற விரும்புபவர்கள் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்கும் பொதுச் சுகாதார நிலையங்களில் ஒன்றை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்