செங்காங் நகரமன்ற நிர்வாகத்தின்கீழ் இயங்கும் குறிப்பிட்ட சில விளையாட்டு அரங்குகளில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பிக்கல்பால் (pickelball) விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குறிப்பிட்ட நேரங்களில் அந்த ஆட்டத்தை விளையாட ஒன்பது அரங்குகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகச் செங்காங் நகரமன்றம் அக்டோபர் 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், அப்பகுதியில் வசிக்கும் 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், அவர்களின் மாறுபட்ட விருப்பங்களையும் வாழ்க்கைமுறையையும் கருத்தில் கொண்டு இந்த வழிகாட்டுமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆங்கர்வேல் விஸ்தா (புளோக் 310B, 312A அருகில்), அஸ்பெல்லா (புளோக் 275B அருகில்), கம்பாஸ்வேல் நார்த் கேட் (புளோக் 262C அருகில்), ரிவர்வேல் கார்டன்ஸ் (புளோக் 120D அருகில்), ரிவர்வேல் பேங்க் (புளோக் 121B அருகில்), ரிவர்வேல் வியூ (புளோக் 161 அருகில்), ரிவர்வேல் ஷோர்ஸ் (புளோக் 175 அருகில்), ரிவர்வேல் ஹேவன் (புளாக் 197 அருகில்) ஆகியவை பிக்கல்பால் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரங்குகள் ஆகும்.
அந்த அரங்குகளில் பிக்கல்பால் ஆட்டத்திற்கான கோடுகள் வரையப்பட்டு, காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை விளையாட அனுமதி அளிக்கப்படும்.
பிக்கல்பாலை விளையாட அந்த அரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் பலகைகளும் அங்கே வைக்கப்படும்.
இந்தப் புதிய நடவடிக்கைகள் குறித்து செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் முஹைமின் அப்துல் மாலிக் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆய்வில் பங்கேற்ற செங்காங்வாசிகளால் முன்மொழியப்பட்ட இரு கட்டுப்பாட்டுகளே நகர மன்றம் சார்பில் புதிய நடவடிக்கைகளாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
செயல்பாடுமிக்க வாழ்க்கைமுறையை விரும்பும் குடியிருப்பாளர்களுக்கு ஆதரவளிப்பதோடு, அமைதியான சூழலை விரும்புவோரின் தேவைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தப் புதிய வழிகாட்டுதல்களை நகர மன்றம் அமைத்துள்ளது.
