சிக்காடா பூச்சிகளைக் கையாள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து தேசிய பூங்காக் கழகம், ஈஸ்ட் கோஸ்ட் நகர மன்றத்துக்கு ஆலோசனை அளித்துவருகிறது.
இந்தப் பூச்சி வகைதான் தெம்பனிஸ் சங்காட் பகுதியில் அதிக அளவில் தோன்றியது. சாங்கி-சீமெய் பகுதியில் சிக்காடா குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈஸ்ட் கோஸ்ட் நகர மன்றத்தைத் தொடர்புகொண்டதாக தேசிய பூங்காக் கழகத்தின் வனவிலங்கு நிர்வாகக் குழுமத்துக்கான இயக்குநர் ஹாவ் சூன் பெங் தெரிவித்தார்.
நீண்டகாலப் பிரச்சினை
ஆரஞ்சு நிற இறக்கைகளைக் கொண்ட சிக்காடா பூச்சிகள் தெம்பனிஸ் சங்காட்டில் நீண்டகாலமாகவே பிரச்சினையாக இருந்துவருவதாக சாங்கி-சீமெய் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெசிகா டான், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
“சில ஆண்டுகளுக்கு முன்பு சத்தம் அதிகமாக இருப்பதாகூப் புகார்கள் வந்தபோதுதான் பிரச்சினை தலைதூக்கியது. ஆனால், சென்ற ஆண்டு (சிக்காடா) கூட்டம் அதிகரித்தபோதுதான் பிரச்சினை தொடர்ந்தது,” என்றார் அவர்.
பரிந்துரைகள்
“பூச்சிக் கொல்லி மருந்து அடிப்பது, புகை மருந்தை அடிப்பது போன்ற பரிந்துரைகளைக் குடியிருப்பாளர்கள் முன்வைத்துள்ளனர். ஆனால், நாம் கவனமாக இருக்கவேண்டும். அங்குள்ள தாவரங்கள், மற்ற விலங்குகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய பூங்காக் கழகத்திடம் சிக்காடா குறித்து அளிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு 10 புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 2025ல் அந்த எண்ணிக்கை 25க்கு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதிகளில் சிக்காடாக்கள் ஏற்படுத்தும் சத்தம் குறித்துதான் பெரும்பாலும் புகார்கள் வந்ததாக திரு ஹாவ் குறிப்பிட்டார். சிக்காடா, உலகளவில் ஆக அதிக சத்தத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் ஒன்றாகும்.
சிக்காடா, தென்கிழக்காசிய வட்டாரத்துக்குச் சொந்தமானது. அதேவேளை, சிங்கப்பூரைப் பொறுத்தவரை அது அந்நிய பூச்சி வகையாகும்.

