தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் மருத்துவக் கழகத் தரவுகளைத் திருடி வெளியிட்ட இணைய ஊடுருவிகள்

1 mins read
bf606fdb-acbb-4c09-9e90-d3c21a7ff798
‘லாக்பிட் 3.0’ எனும் பிணைநிரல் கும்பல் சிங்கப்பூர் மருத்துவக் கழகத்தின் தரவுகளைத் திருடி செப்டம்பர் 10 ஆம் தேதி அதிகாலை 4.41 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது. - மாதிரிப்படம்

ரஷ்யாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘லாக்பிட் 3.0’ எனும் பிணைநிரல் (ரேன்சம்வேர்) கும்பல், சிங்கப்பூர் மருத்துவக் கழகத்துடன் (ஏஎம்எஸ்) தொடர்புடைய ஏறக்குறைய 50 மருத்துவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி ஞாயிற்றுக்கிழமையன்று இணையத்தில் வெளியிட்டது.

இந்தத் தரவுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களில் நிபுணத்துவப் பயிற்சி பெறும் மருத்துவ மாணவர்கள், மருத்துவக் கழகத்தின் இயக்குநர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.

மருத்துவர்களின் அடையாள அட்டை எண், வீட்டு எண், ‘ஏஎம்எஸ்’ சமூக ஊடகக் கணக்குகளுக்கான உள்நுழைவு விவரங்கள், கழக ஊழியர்களின் விவரங்கள், அவர்களின் தொலைபேசி எண்கள் போன்றவற்றை அந்தப் பிணைநிரல் கும்பல் இணையத்தில் வெளியிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

இதே கும்பல், முன்னதாக ஜூன் மாதத்தில் கார்டினா கடிகார நிறுவனத்தின் தரவுகளையும் உலகின் ஆகப் பெரிய கணினிச் சில்லு தயாரிப்பு நிறுவனமான தைவான் குறைகடத்தி உற்பத்தி நிறுவனத்தின் தரவுகளையும் வெளியிட்டது.

தனது சேவையகங்களில் இருந்து தரவுகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததும் அவை உடனடியாக இணையத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டன என்று ஏஎம்எஸ்சின் பேச்சாளர் கூறினார்.

மேலும், உடனடி நடவடிக்கையாக இணையப்பாதுகாப்பு வல்லுநர்கள் நியமிக்கப்பட்டனர் என்றும் அவர்கள் கழகத்தின் இணையப்பாதுகாப்பு உள்கட்டமைப்பை மறுஆய்வு செய்வதற்கும் வலுப்படுத்துவதற்கும் தங்களுடன் இணைந்து பணிபுரிவர் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்