என்எஸ் மைல்கல் விருதுகளை மேம்படுத்த தற்காப்பு அமைச்சு பரிசீலனை

தேசியச் சேவையின் 60 ஆண்டு நிறைவு

என்எஸ் மைல்கல் விருதுகளை மேம்படுத்த தற்காப்பு அமைச்சு பரிசீலனை

3 mins read
fa85ce70-4816-46cd-8a91-313daa01bea8
அடுத்த ஆண்டு தேசிய சேவையின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும்போது முன்னாள், இந்நாள் தேசிய சேவையாளர்களை உரிய வகையில் கௌரவிப்பது குறித்து தற்காப்பு அமைச்சு ஆராய்ந்து வருகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தேசிய சேவையாளர்கள் தங்களுடைய சேவையின் பல்வேறு கட்டங்களில் முக்கிய மைல்கல்லை எட்டியதைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் ரொக்கத் திட்டம் மேம்படுத்தப்படலாம் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் அறிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் தேசிய சேவை 1967ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2027ல் அது 60வது ஆண்டைக் கொண்டாடவிருக்கிறது.

இதையொட்டி புதிய சாதனை விருதுகளைப் பற்றி தற்காப்பு அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

ஆகஸ்ட் 31ஆம் தேதி தமது யூடியூப், சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்ட காணொளியில் பேசிய திரு சான், ஆயத்தநிலை தேசிய சேவைவயாளர்கள் தங்களின் படைப்பிரிவு சகாக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கான வழிகளையும் தற்காப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

தேசிய சேவை வீடமைப்பு, மருத்துவம், கல்வி (என்எஸ் ஹோம்) விருதுகள், சேவையாளர் பயிற்சியில் மூன்று முக்கியக் கட்டங்களில் வழங்கப்படுகின்றன. அவர்களின் வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, கல்வித் தேவைகளுக்கு இத்தொகை வழங்கப்படுகிறது.

தற்போது, தேசிய சேவையாளர்கள் மத்திய சேம நிதி வழியாகவும் ரொக்க வரவுகளாகவும் மொத்தம் $17,000 முதல் $18,500 வரை பெறுகின்றனர்.

“தேசிய சேவையாளர்கள் நாட்டிற்குச் சேவையாற்றும் வேளையிலும், நாட்டின் பாதுகாப்பை கட்டிக்காக்கும் வேளையிலும், அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களில் அவர்களைச் சிறந்த முறையில் அரவணைக்கும் வகையில் இந்த விருதுகள் பயனுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் எப்படி மாற்றலாம் என்பதை ஆராய தற்காப்பு அமைச்சின் குழுவிற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறேன்,” என்று திரு சான் குறிப்பிட்டார்.

“முழுநேர தேசிய சேவையாளர்களைப் பொறுத்தவரை, அவர்களின் வாழ்க்கைப்படித் தொகையைத் தொடர்ந்து மறுஆய்வு செய்யும் நடைமுறை தற்காப்பு அமைச்சிடம் ஏற்கெனவே உள்ளது. அவர்களைக் கவனித்துக்கொள்ள மேலும் என்ன செய்ய முடியும் என்பது குறித்து ஆராயப்படுகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளேட்டின் கேள்விகளுக்குப் பதிலளித்த தற்காப்பு அமைச்சு. முன்னாள், தற்போதைய தேசிய சேவையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருத்தமான (என்எஸ்60) அங்கீகாரத் தொகுப்பு குறித்து ஆராயப்படுவதாகக் கூறியது.

கடந்த 10 ஆண்டுகளில் முழுநேர தேசிய சேவையாளர்களின் வாழ்க்கைப்படி நான்கு முறை மறுஆய்வு செய்யப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டிலிருந்து, அடிப்படை ராணுவப் பயிற்சி பெறும் புதிய சேவையாளரின் வாழ்க்கைப்படி 65 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியது.

ஒரு புதிய சேவையாளர் அல்லது அடிப்படைப் பதவியில் உள்ள அதிகாரிகள் தங்களது தொடக்கநிலை வாழ்க்கைப்படியாக மாதம் $715 பெறுகின்றனர் என்று தேசிய சேவை இணையத்தளத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அவர்களின் பயிற்சி, ராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கைச் செலவினங்கள், இதர முக்கியக் கூறுகளைக் கருத்தில்கொண்டு, தேசிய சேவையாளர்களின் தனிப்பட்ட பராமரிப்புத் தேவைகளுக்கேற்ப வாழ்க்கைப்படி இருப்பதை உறுதிசெய்ய தற்காப்பு அமைச்சு தொடர்ந்து அதனை மறுஆய்வு செய்து வருகிறது,” என்று அமைச்சு குறிப்பிட்டது.

இந்நிலையில் முழுநேர தேசிய சேவையாளர்கள், ஆயத்தநிலை தேசிய சேவையாளர்கள், முன்னாள் சேவையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைக் கௌரவிக்கும் வகையில் பல ‘என்எஸ்60’ நினைவுக் கொண்டாட்டங்களும் முயற்சிகளும் நடைபெறவிருக்கின்றன.

இதில் தேசிய சேவைக் கண்காட்சி, பொது வரவேற்பு ராணுவ உபசரிப்பு உள்ளிட்டவையும் அடங்கும்.

“பல தேசிய சேவையாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க விரும்புகிறார்கள். உண்மையிலேயே அவர்கள்தான் தேசிய சேவையின் சிறந்த ஆதரவாளர்கள்,” என்று காணொளியில் அமைச்சர் சான் கூறியுள்ளார்.

“அவர்கள் தொடர்ந்து பங்களிக்கவும், தொடர்பில் இருக்கவும் வாய்ப்புள்ளது; அவர்களும் சிங்கப்பூர் ஆயுதப்படை குடும்பத்தின் ஓர் அங்கமே,” என்றார் அவர்.

தேசிய சேவையின் 60 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், 2027 தேசிய தின அணிவகுப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான பாடாங் திடலில் நடைபெறும் என்று ஆகஸ்ட் 25ஆம் தேதி அமைச்சர் அறிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்